Friday, 11 April 2014

தமிழர் திருமணம்


—  முனைவர்  ந. இரா. சென்னியப்பனார்

     வாழ்க்கையில் பல்வேறு நிகழ்ச்சிகள், பல்வேறு சடங்குகள் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை பலவிதச் சடங்குகள் மக்கள் இனத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. பலவிதச் சடங்குகளில் திருமணச் சடங்கு மிகப் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழர் வாழ்க்கையில் தொல்காப்பியம் மிகப் பழைய கால திருமணச் சடங்கைச் சுட்டுகின்றது. பெரும்பாலோர் இன்று சோதிடம் பார்த்து, பொருத்தங்கள் பார்த்துத் திருமணம் செய்கின்றனர்.



 நட்சத்திரப் பொருத்தம், பணப்பொருத்தம், வசியப்பொருத்தம், மகேந்திரப்பொருத்தம், தீர்க்கப்பொருத்தம், யோனிப்பொருத்தம், இராசிப்பொருத்தம், இராசி அதிபதிப் பொருத்தம், ரச்சுப்பொருத்தம், வேதைப்பொருத்தம் ஆகிய பத்துப் பொருத்தங்கள் இன்று பஞ்சாங்களில் உள்ளன. பத்துப் பொருத்தங்களில் தினம், கணம், யோனி, இராசி, ரச்சு, ஆகிய ஐந்தும் முக்கியமானவை. ரச்சுத் தட்டினால் திருமணம் செய்யக்கூடாது.

     பத்துக்கு, ஐந்துக்குக் குறையாமல் பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம். இவையல்லாமல் செவ்வாய் திசை, திசா சந்திப்பு முதலியனவும் முக்கிய இடம்பெறுகின்றன. கந்தர்வம், கர்ப்பநிச்சிதம், சகுன நிச்சிதம், குரு தெய்வநியமனம் முதலிய வகையில் பொருத்தம் பாராமல் செய்யலாம் என்ற விதி விலக்கும் உண்டு.


     பிறப்பு, குடிமை, ஆளுமை, வயது, வடிவம், நிலையான அன்பு வழிபட்ட காமம், நிறை, அருள், உணர்வு, திரு ஆகிய பத்து ஒப்புமை வகைகளைத் தலைமக்களுக்குத் தொல்காப்பியர் குறித்துள்ளார். அக்காலத்தில் இப்பத்தும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

     ஒத்த அன்புள்ள தலைவனும், தலைவியும் தாமே உடன்போக்கு மேற்கொள்வதையும், பின் திருமணம் செய்து கொள்வதையும்

     “கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
      புணர்ந்துடன் போகிய காலையான”


(கரணம்- திருமணச் சடங்கு)

தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.

     காதலித்து வந்த தலைவியைத் தலைவன் திருமணம் செய்யாமல் கைவிட்ட நிலையும் ஏற்பட்டது. இத்தகுநிலையில் ஆன்றோர் கூடித் திருமணச் சடங்குகளை வற்புறுத்தி மேற்கொள்ளச் செய்தனர்.

     “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
      ஐயர் யாத்தனர் கரணம் என்ப”
(ஐயர் – அறிவில் மூத்த சான்றோர்)

என்ற நூற்பாவும் தொல்காப்பியத்தில் உண்டு.

     கற்பை நிலை நாட்டும் இல்வாழ்க்கையில் திருமணச் சடங்கு உண்டாயிற்று. திருமணத்தின்போது சடங்குகள் செய்து தலைவியின் பெற்றோர் கொடுப்பத் தலைவனின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். இன்றைய திருமணச் சடங்குகளிலும் ‘கொடுத்தோம்-கொண்டோம்’ என்ற முறை உள்ளது.

     சங்க இலக்கியங்களில் அகநானூற்றில் திருமண முறை விரிவாகப் பாடப்பெற்றுள்ளது.

     “உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
      பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால்
      தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
      மனைவிளக்கு உறுத்து மாலை தொடரிக்
      கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
      கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
      கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
      உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்
      பொதுசெய் கம்மலை முதுசெம் பெண்டிர்
      முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
      புதல்வற் பயந்த திதலை அவ்வயிற்று
      வால்இழை மகளிர் நால்வர் கூடிக்
      கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
      பெற்றோர் பெட்கும் பிணையை ஆகுஎன
      நீரொடுசொரிந்த ஈரிதழ் அலரி
      பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
      வதுவை நன்மணம்”


என்பது அகநானூற்றுப் பாடல் பகுதி.

     உழுந்தினை மிகுதியாகச் சேர்த்து நன்றாக வெந்த உணவுடன் சோற்றினைக் கூடியிருந்தோர் உண்டனர். ஆரவாரம் உண்டாயிற்று, பந்தலில் வரிசையாகக் கால்கள் நடப்பட்டிருந்தன. பந்தலின் கீழ்த்தரையில் புதுமணலைப் பரப்பினர், மனையில் விளக்கேற்றினர், மாலைகளைத் தொங்கவிட்டனர். இருள் நீங்கிக் காலை நேரம் வந்தது, சந்திரன் தீய கொள்களின் தொடர்பு நீங்கி உரோகினி நட்சத்திரத்துடன் சேரும் நல்ல நேரம் வந்தது. தலையில் மங்கல நீர்க்குடத்தைச் சுமந்தவர்களும், புதிய பாத்திரங்களைக் கையில் கொண்டவரும் ஆனமகளிர் கூடினர்.



     பொதுவான ஆரவாரம் மிக்கது. வயதான மகளிர் திருமணத்திற்கு வேண்டியவற்றை முன்னும் பின்னுமாக முறையாகத் தந்தனர். மக்களைப் பெற்ற வயிறு வாய்த்த மங்கல மகளிர் நால்வர் கூடினர். கற்பினில் தவறாமல் கொண்ட கணவனுக்கு நல்ல பல உதவிகளைச் செய்து பெற்றோர்கள் பாராட்டும் சிறப்புடன் வாழ்வாயாக! என்று கூறி நீருடன் சேர்ந்த பூவையும் நெல்லையும் கரிய கூந்தலில் தங்குமாறு தூவினர்.

     இவ்வாறு திருமணம் நடைபெற்றது என்பது பாடலின் கருத்தாகும். மற்றொரு அகநானுற்றுப் பாடலிலும் நற்றிணைப் பாடலிலும் திருமணச் சடங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

     தூவுவதில், நீர் தூய்மையைக் குறிக்கும். பூ – மங்கலத்தையும் கற்பையும் குறிக்கும். நெல் – உழைப்பையும் எதிர் கால நல்வாழ்வையும் குறிக்கும். இன்று நெல்லுக்குப் பதிலாக மஞ்சள் அரிசி வந்துவிட்டது.

     சங்க காலத் திருமணமுறை, சிலப்பதிகாரக் காலத்திலேயே மாறிவிட்டது.

     “மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டிடத்
      தீவலம் செய்து காண்பவர்கள் நோன்பு என்னை-”


என்ற நிலை வந்துவிட்டது. சங்க இலக்கியங்களில் தீ வளர்த்தல், பார்ப்பான் சடங்கு செய்தல் இல்லை. சிலப்பதிகார்த்தில் அவை வந்துவிட்டன.

     கொங்குவேள் பெருங்கதையில், அக்காலத்தில் கொங்கு நாட்டில் இருந்த திருமண முறைகளை விரிவாகப் பாடியுள்ளார். சேக்கிழார் பெருமான் பலவிதத் திருமண முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். சீர்திருத்தத் திருமணத்தையும் பாடியுள்ளார்.


Karthik Sivakumar Ranjini Wedding Photos Stills
தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட தமிழ் மறைகள் ஓதி கோவை, திருப்பேரூர்  மணிவாசகர் அருட்பணி மன்றத்தால் (2011-சூலை)  நடத்திவைக்கப்பட்ட தமிழ்த் திருமணம்.


     திருமருகல் என்ற ஊரில் உடன்போக்கு வந்த தலைவனைப் பாம்பு தீண்டியதால் இறந்துவிட்டான். தலைவி அழுது புலம்பினாள். அங்கு தங்கியிருந்த திருஞானசம்பந்தர்க்குப் புலம்பல் ஒலி அதிகாலையில் கேட்டது. நேராக அடியார்களுடன் அங்கே சென்றார். நடந்ததைக் கேட்டார்.

     வைப்பூர் எம்முடைய ஊர், அங்குள்ள தாமன் என் தந்தை, இங்கே உயிர் நீத்துள்ள இவன் என் தந்தைக்கு மருமகன், என்னுடன் பிறந்தவர் அறுவர், மூத்தவளை இவனுக்குத் திருமணம் செய்து தருவதாகத் தந்தை வாக்களித்திருந்தார். வேறு ஒருவன் பெரும்பொருள் கொடுத்ததால் மூத்தவளைத் திருமணம் செய்து கொடுத்தார். இவ்வாறு அறுவரையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். மனம்தளர்ந்த இவனுடன் நான் உடன்போக்கு வந்தேன். அரவு தீண்டி இறந்து விட்டான். துயர்நீங்க அருள் செய்வீர்! என்று அப்பெண் கூறினாள். ‘சடையாய் எனுமால்’ என்ற பதிகம் பாடினார். விடம் நீங்கி எழுந்தான் அவன்.

     “….அருட்காழிப்பிள்ளையார் அடியில் வீழ்ந்த
      நங்கை அவள்தனை நயந்த நம்பியோடும்
      நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
      மங்குல்தவழ் சோலைமலி புகலிவேந்தர்
      மணம்புணரும் பெருவாழ்வு வகுத்துவிட்டார்.”


என்பது சேக்கிழார் வாக்கு. எந்தவிதமான திருமணச் சடங்கும் இல்லாமல் திருஞானசம்பந்தர் மணம்புணரும் பெருவாழ்வு வகுத்துவிட்ட திருமணமுறை சீர்திருத்தத்தில் முன்னோடி முறையாகும். தற்போது பெரிய திருமண மண்டபம் பிடித்துப் பெரும் செலவு செய்து ஐயர்களை வைத்துத் திருமணம் செய்வது பரவலாக உள்ளது. அவர்கள் சொல்லுகின்ற மந்திரங்களின் பொருள் புரியாமல் செய்து வருகின்றனர்.

     “சோமஹ ப்ரமமோ, விவிதே கந்தர்வ
      விவிதே உத்ரஹ, த்ருதியே அக்னிஸ்டே
   பதிஸ துரியஸ்தே, மனுஷ்ய ஜாஹ”
(சங்கராச்சாரியார்– ‘தெய்வத்தின் குரல்’ – இரண்டாம் பகுதி, பக்கம் 875)

     முதலில் சோமன்(சந்திரன்) உன்னை அடைந்தான், இரண்டாவதாகக் கந்தருவன் உன்னை அடைந்தான், மூன்றாவதாக அக்கினி உனக்கு அதிபதி ஆனான். மனித வர்க்கத்தைச் சேர்ந்த நான்காவதாக நான் உன்னை ஆளுவதற்கு வந்திருக்கிறேன் – என்பது பொருளாகும்.

     கற்பு முதன்மை எனக் கொண்ட தமிழர் வாழ்வில் இத்தகைய மந்திரங்கள் ஓதித் திருமணம் செய்ய வேண்டுமா? திருமுறைகளிலும் திவ்வியப்பிரபந்தங்களிலும் திருமணம் பற்றிய பாடல்கள் ஏராளமாக உள்ளனவே!

     “குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவம் கண்டு;
      குறிப்பினொடும் சென்றவள்தன் குணத்தினை நன்கறிந்து;
      விரும்பு வரங்கொடுத்து அவளை வேட்டருளிச் செய்த;
      விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவிய ஊர்”


எனத் தொடங்கும் தேவாரப் பாடலைக் கூறி மணம் செய்தால் நன்றாக இருக்கும்.

     “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
      முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
      மைத்துனன் நம்பிமது சூதனன் வந்து என்னைக்
      கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்…”


என்ற சூடிக் கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார் பாடல் திருமணத்தில் ஓதினால் மிக நன்றாக இருக்கும்.

Thursday, 10 April 2014

திருக்கோயில் கருவறைக்குள் மகளிர் நுழையலாமா?



 —  ந. இரா. சென்னியப்பனார்


      “எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்
      உண்மை யாவது பூசனை எனவுரைத் தருள
      அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
      பெண்ணின் நல்ல வளாயின பெருந்தவர்க் கொழுந்து




என்று காமாட்சியம்மை வழிபட்டதைச் சேக்கிழார் பெருமான் பாடியுள்ளார்.

     மகளிர் கருவறைக்குள் சென்று வழிபட்டதைத் தலபுராணங்கள், திருமுறைகள், கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கும்பகோணத்துக்கு வடகிழக்கில் திருப்பனந்தாள் என்ற பாடல் பெற்ற தலம் உள்ளது. தாடகை என்ற பெண் திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் திருக்கோவிலில் நாள்தோறும் வழிபாடு செய்து வந்தாள்.

     ஒருநாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது கட்டிய ஆடை அவிழ்ந்து விழத் தொடங்கியது. நழுவிய ஆடையை இரு முழங்கைகளாலும் அழுத்திப் பற்றிக் கொண்டு இருகைகளாலும் பிடித்திருந்த மாலையைச் சிவலிங்கத்திற்குச் சூட்ட முயன்றாள். அப்போது இறைவன் மனமிரங்கித் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றுக் கொண்டார். அன்றுமுதல் அச்சிவலிங்கம் சாய்ந்தபடியே இருந்தது.

     சோழ மன்னன் செஞ்சடையப்பரை வழிபடச் சென்றபோது சிவலிங்கம் சாய்ந்திருப்பதைப் பார்த்தார். சிவலிங்கத்தை நேர் செய்ய முயன்றார். மன்னன் ஆணைப்படி யானை, சேனை முதலியவற்றின் துணையுடன் கயிறு கொண்டு இழுத்தும் சிவலிங்கம் நேராகவில்லை. குங்குலியக்கலயநாயனார் மன்னனின் இவ்வருத்தத்தைக் கேட்டுக் கோயிலுக்குச் சென்று தம் கழுத்தில் கயிற்றைக் கட்டிக் கொண்டு, கயிற்றின் மறுநுனியைச் சிவலிங்கத்தின் மேல் சுற்றி வலிந்து இழுத்தார். அவருடைய அன்புக்குக் கட்டுப்பட்ட இறைவன் நிமிர்ந்தார்.

     பெரியபுராணம், தலபுராணம் இரண்டிலும் இச்செய்திகள் உள்ளன. தாடகை என்ற பெண், கருவறைக்குள் சென்று வழிபட்டதை இதனால் அறியலாம். சோழ நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் திருச்சாத்தமங்கை என்பது திருநீலக்க நாயனாரால் சிறப்புப் பெற்றது. மயிலாடுதுறை திருவாரூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமருகல் என்ற தலத்திற்கு வடகிழக்கில் இது உள்ளது. இன்று சீயாத்தமங்கை என்று வழங்குகின்றது.

     திருநீலநக்க நாயனார் நாள் தோறும் திருச்சாத்த மங்கையில் உள்ள அயவந்தி என்ற கோவில் இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு திருவாதிரை நாளன்று மனைவியுடன் வழிபாடு செய்யக் கோவிலுக்குச் சென்றார். கருவறைக்குள் சென்று வழிபாடு செய்யத் தொடங்கினார். பக்கத்திலிருந்த மனைவியார் வழிபாட்டுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொடுத்தார்.

     வழிபாட்டு நிறைவில் இறைவன் முன் அமர்ந்து ஐந்தெழுத்தை விதிப்படி உச்சரிக்கத் தொடங்கினார். மெய்ம்மறந்து ஐந்தெழுத்தை ஓதினார். அப்போது சிலந்திப் பூச்சியொன்று சிவலிங்கத்தின் மீது விழுந்தது. இதனைக் கண்ட மனைவியார் உடனே பக்கத்தில் சென்று, பச்சிளம் குழந்தை மீது சிலந்தி விழுந்தால் தாய் வாயால் ஊதி உமிழ்ந்து வெப்பக் கொடுமையை நீக்குவதைப் போலச் சிவலிங்கத்தின் மீது விழுந்த சிலந்தியை வாயால் ஊதி உமிழ்ந்தாள்.

     வாயின் உமிழ் நீர் சிவலிங்கத்தின் மீது பட்டது. இதனைக் கண்ட திருநீலநக்கநாயனார் கண்களை மூடிக் கொண்டு மனைவியாரைப் பார்த்து, ‘அறிவற்றவளே! இச் செயலை ஏன் செய்தாய்? ’ என்று கேட்டார். சிவலிங்கத்தின் மீது வீழ்ந்த சிலந்தியை ஊதி உமிழ்ந்ததாக மனைவியார் கூறினார். ‘வேறு வகையில் போக்கியிருக்கலாம்; ஊதி உமிழ்ந்தது தவறு, அதனால் வழிபாடு தவறு உடையதாயிற்று என்று கூறி’ மனைவியைக் கோவிலிலேயே விட்டுச் சென்று விட்டார். அஞ்சிய மனைவியார் இரவு முழுவதும் கோவிலிலேயே தங்கி விட்டார்.

     இரவிலே திருநீலநக்கநாயனார், கனவில் இறைவன் தோன்றி ‘உம்முடைய மனைவியார் தாயன்போடு எம்மை ஊதி உமிழ்ந்த இடம் தவிரப் பிறவிடங்களிலெல்லாம் சிலந்தியால் உண்டான கொப்புளங்கள் தோன்றியுள்ளன. அவற்றைப் பார்’ எனக் காட்டினார். உடனே நாயனார் இறைவனைத் தொழுது வணங்கி விடிந்ததுதம் கோவிலுக்குச் சென்று கண்ணீர் சிந்தி அழுதார். பிறகு மனைவியாரை அழைத்துச் சென்றார்.

     இச்செய்திகளைப் பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் பக்திச் சுவை ததும்பப் பாடியுள்ளார். நாயனாருடன் மனைவியாரும் கோவில் வழிபாட்டில் பங்குபெற்றதையும் கருவறைக்குள் மகளிர் சென்று வழிபட்டதையும் இதன் மூலம் அறிய முடிகிறது.

     கொங்கு நாட்டில் வேடுபறியால் சிறப்புப் பெற்ற தலம் திருமுருகன்பூண்டி. சேரமான் பெருமாளிடம் சுந்தரமூர்த்தி நாயனார் பெற்று வந்த பொருள்களைச் சிவகணங்கள் திருடர் வடிவில் வந்து கவர்ந்து சென்றனர். சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடி இழந்த பொருள்களை மீட்டார்.

     திருமுருகன் பூண்டி கோவிலில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. முருகநாதர் கோவில் கருவறை வடக்குச் சுவரில் கொங்குப் பாண்டியன் வீரபாண்டியதேவன் (கி.பி. 1265–1285) காலக் கல்வெட்டு ஒன்று உள்ளது. அக்கல்வெட்டில் தேவரடியார்க்குக் கொடுத்த வரிசைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

     மாலைக் காலத்தில் பூசையின் போது அரங்கேறி நடனம் புரிதல், திருவிழாக் காலத்தில் ஊர்வலத்தின் இறுதியில் இறைவனுக்கு உண்டாகும் கண்ணேறு (திருஷ்டி) போக்கி ஆரத்தி எடுத்தல், பூசை முடிவில் திருநீறு, பிரசாதம் பெறும் உரிமை பெற்றிருத்தல், இறைவன் உற்சவத்தின் உலாவரும் போது உயர்ந்த ஆசனங்களிலிருந்து பார்த்தல், நடனம் ஆடிச் செல்லும் போது நடைக் காவனம் விரித்தல், மார்கழித் திருவாதிரையில் திருவெம்பாவைப் பாடலுக்கு அபிநயம் பிடித்தல் முதலிய வரிசைகள் தரப்பெற்றன.

     இவற்றிக்கெல்லாம் மேலாகக் கோயிலில் மூன்றாம் அறையாகிய மகாமண்டபம் கடந்து, அர்த்த மண்டபம் கடந்து கருவறை சென்று வழிபட உரிமை தரப்பட்ட செய்தி கல்வெட்டில் வருகின்றது.

     தேவரடியாராகிய நாட்டிய பெண்கள் கருவறை வரை சென்றனர் என்பதனால் கருவறைக்குள் சென்றனர் என்பது கல்வெட்டால் புலனாகிறது. கோகர்ணம், திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்) ஆகிய தென்னிந்தியக் கோவில்களிலும் சோமநாதம், கேதாரநாத், காசி, உஜ்ஜியினி, நாகநாதம், திரியம்பகம், பீமநாதம் முதலிய வட இந்தியக் கோவில்களிலும் ஆண், பெண் அனைவரும் கருவறைக்குள் சென்று வழிபடுவது இன்றும் நடைபெற்று வருகிறது.

     தமிழகத்தில் புலியூர் சிமெண்ட் ஆலைக்குப் பக்கத்தில் உள்ள உப்பிடமங்கலம் அடியார்க்கு எளியார் கோவிலும், தாடிக்கொம்பு திருவருள்துறை நாதர் கோவிலும் ஆண், பெண் அனைவரும் சென்று வழிபடலாம் என்ற மரபு நடைபெற்று வருகிறது.

     கோவை – கோவைப்புதூர், சிவக்குடிலில் உள்ள சிவன் கோவிலில் விரும்பியவர்கள் உள்ளே சென்று வழிபடலாம். கயிலைக்கு மூன்று முறை சென்று வந்த கயிலைக் குருமணி சித்தர் சுவாமிகள் வழிபாட்டில் உள்ள இக்கோவிலில், மகளிர்க்கு எல்லா உரிமையும் உண்டு.

     யானை, மாடு, சிலந்தி, காக்கை, அணில், நண்டு, ஈ, நாரை, கழுதை முதலிய அஃறிணைப் பொருள்கள் வழிபட்டுள்ளதைத் தல வரலாறுகள் பறைசாற்றுகின்றன.

     அம்மையின் அருளுக்குரியவர்கள், ஆண், பெண் இருபாலரின் தோற்றத்திற்குக் காரணமானவர்கள், பராசக்தியின் பரம்பரை ‘மகளிர்’ என்று பகவான் இராமகிருஷ்ணரால் பாரட்டப்பெற்றவர்கள் கருவறைக்குள் சென்று வழிபடுவதில் என்ன தவறு?

Monday, 1 April 2013

தமிழ்கூறு நல்லுலகத்திற்கு ஒரு வேண்டுகோள்....

தமிழ்கூறு நல்லுலகத்திற்கு ஒரு வேண்டுகோள்....
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

தமிழரின் பண்பாடு, நாகரிகம், சமயம், வாழ்க்கை முதலியவற்றை வெளிப்படுத்தும் முறையில் ‘சமயத்தமிழ்’ இதழில் தமிழ் மொழியின் தொன்மையான இலக்கணம், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், அறநூல்கள், காப்பியங்கள், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள், பக்திப் பனுவல்கள் ஆகியவற்றைத் தமிழ் மக்களிடம் கொண்டு செல்லும் நன்நோக்கதில் தொடங்கப்பட்டுள்ள இந்நூலுக்கு தமிழ் கூறு நல்லுலகம் ஆதரவு நல்குமாறு வேண்டுகிறோம்.

ஓர் ஆண்டு உறுப்பினர் கட்டணம் ரூ.100 மட்டுமே...

ஆயுள் கட்டணம் 5,000


புரவலர் கட்டணம் 10,000.

இதழுக்காக பதிவு செய்ய விரும்பும் அன்பர்கள் கீழே குறிப்பிட்டுள்ள அலைப்பேசியில் தொடர்பு கொள்ளவும்.

+91 99655 60762/+91 97398 96829...

நன்றி...

மணிவாசகர் அருட்பணி மன்றம்
பேரூர், கோவை.
http://www.manivasagar.com/

சமயத்தமிழ் திங்களிதழ் தொடக்கவிழா

சமயத்தமிழ் திங்களிதழ் தொடக்கவிழா
=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

கோவை மணிவாசகர் அருட்பணி மன்றத்தின் சார்பாக ‘சமயத்தமிழ்’ எனும் திங்களிதழ் தொடங்கப்பட்டுள்ளது. ‘சமயத்தமிழ்’ இதழின் தொடக்கவிழா 31.03.2013 கோவை, தேவாங்க மேனிலைப்பள்ளி சாலையில் அமைந்துள்ள, சன்மார்க்க சங்க மண்டபத்திலே நடைபெற்றது.
விழாவுக்கு கற்பகம் பல்கலைக் கழக வேந்தர் திரு. இராச. வசந்தகுமார் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார். கோவை 'மாநகர தந்தை' செ.ம.வேலுசாமி ஐயா அவர்கள் சமயத்தமிழின் முதல் இதழை வெளியிட திரு.க.குமரன், திரு.பூஜாபழனிசாமி, திரு.இரகுபதி,திரு.கு.திருநாவுக்கரசு உள்ளிட்ட பெரியவர்கள் பெற்றுக் கொண்டனர்.

மணிவாசகர் மன்றத்தின் தலைவர். முனைவர். ந.இரா.சென்னியப்பனார் அவர்கள் அறிமுக உரை தந்தார்கள். ஏழிசை வல்லபி. சொர்ணா சோமசுந்தரம் அம்மையார் அவர்கள் வாழ்த்துரை வழங்க, இதழ்களின் வரலாறு, தொன்மைப் பற்றி வெ.அனந்த கிருட்டிணன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். நிறைவாக ‘தண்டமிழாசான்’ அ.மா.இலட்சுமிபதிராசு அவர்கள் நன்றியுரை சொல்ல விழா இனிதே நடைபெற்றது.

நன்றி.
மணிவாசகர் அருட்பணி மன்றம்

http://www.manivasagar.com/
பேரூர், கோவை.

‘சமயத்தமிழ்’ திங்களிதழ் தொடக்க விழா அழைப்பிதழ்


‘சமயத்தமிழ்’ திங்களிதழ் தொடக்க விழா அழைப்பிதழ்



உழுவல் அன்பின் உறவீர்,

வணக்கம். பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றத்தின் சார்பாக "சமயத் தமிழ்" என்ற மாத இதழ் வெளிவரவுள்ளது. அதன் துவக்க விழா எதிர்வரும் திருவள்ளுவராண்டு 2044, பங்குனித் திங்கள் 18ஆம் நாள் (31-03-2013) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00மணியளவில் கோவை மலர் அங்காடியில் உள்ள சன்மார்க்க சங்கத்தில் நடை பெறவுள்ளது. அது சமயம் அன்பர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

விழாவின் அழைப்பிதழ் இணைக்க பட்டுள்ளது. மேலும் சந்தா விவரமும் அழைப்பிதழில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதழுக்காக பதிவு செய்ய விரும்பும் அன்பர்கள் கீழே குறிப்பிட்டுள்ள அலைப்பேசியில் தொடர்பு கொள்ளவும்.
+91 99655 60762/+91 97398 96829...

இந்த மாத இதழ் தமிழையும், தமிழனைப் போற்றும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது... நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

மணிவாசகர் அருட்பணி மன்றம்
பேரூர், கோவை.



Sunday, 10 February 2013

மாதொரு பாகன்

—  ந. இரா. சென்னியப்பனார்


 “பாகம் பெண் உருவானாய் போற்றி” (திருவாசகம்)

இறைவனுக்கு அருவம், அருவுருவம், உருவம் என்ற மூன்று நிலைகள் உள்ளன. இது சைவ மரபு. அருவம் என்பது கண்ணால் காணஇயலாத நிலை. ஞான நெறியில் வழிபாடு செய்வோர்க்கு உரியது. அருவுருவம்-சிவலிங்க வடிவம் ஆகும். கண்ணால் காணலாம். உருவம் இருபத்தைந்து வகைப்படும். மகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்து என்று வழங்குவது சைவ முறையாகும். இருபத்தைந்து திருவுருவங்களில் ஒன்றே மாதொருபாகன் – உமையொருபாகன் வடிவம்.

புராண வரலாறு


உமாதேவி இறைவனோடு வீற்றிருந்தாள். வழிபட வந்த பிருங்கி முனிவர் இறைவனை மட்டும் வலம் வந்து வணங்கிச் சென்றார். அதனைக் கண்டு கோபம் அடைந்த உமாதேவி, பிருங்கி முனிவரின் உடலில் உள்ள – சக்தியைத் தரும் தசையினை நீங்கச் செய்தாள். இதனால் நடக்க முடியாதவரானார். இறைவன் முனிவர்க்கு நிற்பதற்காகவும் நடப்பதற்காகவும் மூன்றாவது காலினையும் ஊன்று கோலினையும் தந்து உதவினார். உமாதேவியோ கடுமையாகத் தவஞ்செய்து, இறைவன் உடலில் இடப் பாகத்தைத் தன்னுடையதாகப் பெற்றாள்.

தொன்மைக்கோலம்


உமையொருபாகன் வடிவம் மிகவும் தொன்மையானது.

     “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” (ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து)

     “பெண்உரு ஒரு திறன் ஆகின்றது” (புறநானூறு கடவுள் வாழ்த்து)

என்று சங்க காலத்திலேயே உமையொரு பாகனைப் பற்றிக் குறிப்புகள் காணப்படுகின்றன.

இறைவனுக்குரிய வலப் பாகத்தில் புலித்தோலும், சங்கக் குழையும், பால் போன்ற வெண்மையான திருநீறும் சூலமும்-இறைவிக்குரிய இடப்பாகத்தில் பட்டாடையும், சுருண்ட தோடும், பசியசந்தனமும், பச்சைக்கிளியும், தொகுதியான வளையல்களும் உடையவராய் மிகப் பழமையான கோலத்தில் உமையொருபாகன் உள்ளார் என்பதனை மாணிக்கவாசகர்,

     “தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
     பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
     சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
     கோலமே நோக்கிக் குளிர்ந்து ஊதாய் கோத்தும்பி”

என்று திருவாசகத்தில் பாடியுள்ளார்.

மாணிக்கவாசகர் காலத்திலேயே தொன்மைக் கோலம் என்று பாடியிருப்பது உமையொருபாகனின் பழமையைக் காட்டுகின்றது.

திருச்செங்கோட்டு உமையொருபாகன்
மலைக்குச் செங்குன்று என்றும், ஊர்க்குச் செங்குன்றூர் என்றும் சங்க காலத்தில் வழங்கின. செங்குன்றூர்கிழார் சங்க காலப்புலவர் ஆவார். திருஞானசம்பந்தரும் கொடிமாடச் செங்குன்றூர் என்றே பாடியுள்ளார். மலையைக் குன்று என்று வழங்குவதைப் போலவே, கோடு என்றும் வழங்குவது உண்டு. செங்குன்று செங்கோடு எனவாயிற்று.

     “சீர் கெழுசெந்திலும் செங்கோடும் ஏரகமும்”

என்று இளங்கோவடிகள் முருகன் உறையும் இடமாகச் செங்கோடு எனும் தலத்தைக் குறித்து உள்ளார். திருப்பரங்குன்று போன்று திருச்செங்கோடும் முருகனுக்கும் இறைவனுக்கும் உரிய தலமாகும். திருச்செங்கோட்டில் மலைக்கோவிலில், மேற்குப் பார்த்த நிலையில், கருவறையில் உமையொருபாகன் காட்சி தருகிறார்.

வடமொழியில் அர்த்த நாரீசுவரர் என வழங்கப்பெறுகிறது. அர்த்தம் – பாதி, நாரி - பெண், ஈசுவரர் – ஐஸ்வர்யம் உடையவர் – செல்வன் – இங்கு இறைவனைக் குறிக்கும். பெண் ஒரு பாகன், உமையொருபாகன், பெண்ணொரு பாகங் கொண்ட கண்ணுதற் கடவுள் முதலிய பெயர்களால் தமிழில் வழங்கப்பெறும்.

     “வெந்த வெண்நீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல
     பந்தணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி”

என்று திருஞானசம்பந்தர் திருச்செங்கோட்டுத் தேவாரத்தில் பாடியுள்ளார். வெண்மை நீறணிந்த வெண்மைக் கோலத்தோடு இருப்பதை இன்றும் காணலாம்.

மலைமகள் கூறுடையான், ஏலமலர்க்குழலாள் ஒரு பாகம், பணைத்தோளியோர் பாகம் என்றெல்லாம் தலை மகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தர் பாடியுள்ளார். இலைத் தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவையுடையீர் எனத் திருஞானசம்பந்தர் பாடியதற்கேற்பத் தண்டு இருப்பதைக் காணலாம்.

தத்துவம்


நின்ற கோலத்திலுள்ள உமையொருபாகன் வடிவத்தில் இடப்பக்கத்தில் அம்மைக்குரிய அடையாளங்களில் கொங்கையிருக்கும், வலப்பாகத்தில் இறைவனுக்குரிய அடையாளங்களில் முழங்கால் வரை புலித்தோல் இருக்கும். நான்கு அல்லது ஆறு அல்லது எட்டுக் கைகள் உருவங்களில் அமைந்திருக்கும்.

‘உமையம்மையும் தாமும் ஒன்றாம் தன்மையை வடிவிலும் வைத்து விளக்குதல் போல, அம்மையை இடப்பாகத்தில் நிறுவி நாற்கரங்களும் உடையவராய் அர்த்த நாரீசுவரர் உள்ளார்’ எனச் சிவஞான முனிவர் பாடியுள்ளார்.

கணவன் மனைவி ஒற்றுமையுடன் இல்லறம் நடத்தவும் இல்லற இன்பம் இனிது பெறவும் அர்த்த நாரீசுவரர் வழிபாடு பயன்தரும் என்று கச்சியப்ப முனிவர் பாடியுள்ளார்.

வாழ்க்கையில் கணவன் மனைவியின் ஒருமைப்பாட்டைக் காட்டுவதே அர்த்த நாரீசுவரர் உருவம் ஆகும். அன்றே நம் இறைவன் அவ்வாறு கோலங் கொண்டுள்ளார் என்பது எண்ணி மகிழத்தக்கது.

Wednesday, 16 January 2013

தீப ஆராதனைகளின் விளக்கங்கள்

—  ந. இரா. சென்னியப்பனார்

விளக்கு வழிபாடு தமிழகத்தில் மிகப்பழங்காலந்தொட்டு நடைபெற்று வருகின்றது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே விளக்கு வழிபாடு நடைபெற்றிருக்கின்றது. பெருங்கற்சின்னம், முதுமக்கள் தாழி முதலிய அகழ்வாய்வுப் பொருள்களில் பலவகையான விளக்குகள் கிடைத்துள்ளன. எனவே, அக்காலத்தில் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வழிபாட்டுக் குரியனவாக இருந்துள்ளன.

இன்று கிடைக்கும் தமிழ் நூல்களில் தொல்காப்பியமே மிகத் தொன்மையானது. அந்த நூலில் ‘விளக்குநிலை’ என்ற துறை புறத்திணை இயலில் குறிக்கப்பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் விளக்கு வழிபாட்டுச் செய்திகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. ‘மங்கையர் நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக் கையமை விளக்கு நந்துதொறுமாட்ட என்று முல்லைப் பாட்டிலும் ‘மனை மாண்சுடர்’ என்று நற்றிணையிலும், ‘இரவில் பஞ்சிவெண்திரிச் செஞ்சுடர் நல்லில்’, ‘மகளிர் கை புணையாக நெய் பெய்து மாட்டிய சுடர்’ என்று குறுந்தொகையிலும் குறிக்கப்பெறுகின்றன.

வீடுகளில் முன்பகுதியில் அமைந்த முற்றங்களில் மகளிர் மாலை நேரத்தில் விளக்குகளை வைத்து நெல், மலர் இட்டு வழிபட்ட செய்திகள் நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி முதலிய இலக்கியங்களில் உள்ளன.

     “எல்வளை மகளிர் மணிவிளக்கெடுப்ப
     மல்லன்மூதூர் மாலை வந்திறுத்தென”   (சிலப்பதிகாரம்)

     “பைந்தொடிர் மகளிர் பலர் விளக்கு எடுப்ப”   (மணிமேகலை)

     “உள் இழுது உறீஇய ஒள்ளடர்ப் பாண்டில்
     திரிதலைக் கொளீஇ எரிதருமாலை”   (பெருங்கதை)


என்று காப்பியங்களிலும் காணப்படுகின்றன. கோவில்களிலும் அரண்மனைகளிலும் விளக்குகள் எரிக்கப்பெற்ற செய்திகளும் காணப்படுகின்றன. திருமுறைகளில் விளக்கு வைத்து வழிபாடு செய்தல் விரிவாகப் பேசப் பெறுகின்றன. திருஞானசம்பந்தர் காலத்திலேயே கார்த்திகை மாத விளக்கு வழிபாடு தொன்மையானது எனக் கூறப்பட்டுள்ளது. ‘தொல் கார்த்திகை நாள்... தையலார் கொண்டாடும் விளக்கீடு’ என்பது அவர் வாக்கு.

1. வீடுகளில் விளக்கு வழிபாடு 2. பொது இடங்களான மண்டபங்கள், கோவில் மண்டபங்கள் முதலிய இடங்களில் பலர் கூடி விளக்கேற்றி வழிபடுதல், 3. கோவில்களில் விளக்கு இடுதல், 4. பூசை நேரங்களில் பலவகையான அலங்கார தீபங்கள் காட்டுதல்-என்று விளக்கு வழிபாட்டை வகைப்படுத்திக் கொள்ளலாம்.

1. வீடுகளில் மாலைநேரம், சிறப்பு நாட்கள் முதலிய காலங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தல் நல்லது. வீட்டுக்கு மங்கலம், எட்டுத் திருமகளிரும் (அஷ்ட லக்ஷ்மிகள்) அருள் செய்வர்.

2. கூட்டு வழிபாட்டைப் பலரும் ஒரே தன்மையான விளக்குகளை வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றிப் பற்றவைத்து குங்குமம் அல்லது மலர்களால் அருச்சனை செய்து வழிபடலாம். ‘விளக்குப் போற்றி’ என்று நூல்கள் வந்துள்ளன. ஒருவர் போற்றி சொல்ல மற்றவர் பிந்தொடர்ந்து சொல்லி நிறைவின் போது படையலிட்டுக் கற்பூரங்காட்டி வழிபடலாம். பலரும் ஒன்று சேர்வது சமுதாய ஒற்றுமைக்குக் காரணமாக அமையும். ஐந்து திரியிட்டுச் சுடரேற்றி வழிபடும் விளக்கில் மலைமகள், கலைமகள், அலைமகள் மூவரும் அமர்ந்து அருள் செய்வர்.

3. திருக்கோவில்களில் விளக்கு வைப்பது புண்ணியமாக முன்பு கருதப்பட்டது. திருமறைக்காட்டில் எலி ஒன்று கோவிலில் எரிந்து கொண்டிருந்த விளக்கில் நெய் உண்ணப் புகுந்த்து. சுடர் மூக்கைச் சுடர் திரியை எலி தூண்டியது. அணையும் விளக்கு நன்றாக எரியத் தொடங்கிற்று. இந்தப் புண்ணியத்தால் எலி அடுத்த பிறப்பில் மூன்று உலகங்களையும் ஆளுகின்ற மாவலிச்சக்கரவர்த்தியாக ஆயிற்று.

     “நிறை மறைக்காடு தன்னில் நீண்டுஎரி தீபம் தன்னைக்
     கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
     நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகம் எல்லாம்
     குறைவறக் கொடுப்பர்போலும் குறுக்கைவீரட்டனாரே”


என்பது திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் ஆகும்.

நாயன்மார்களில் கலியநாயனார் நமிநந்தியடிகள், கணம்புல்ல நாயனார் ஆகியோர்கள் கோவிலில் விளக்கு எரித்து இறைவன் திருவருள் பெற்றவர்கள் ஆவர். கோவில்களில் வைக்கப்பெறும் விளக்கினை நந்தியா தீபம், சந்தியா தீபம் எனக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. அணையாமல் எரியும் தீபம் நந்தியா தீபம், நந்தா தீபம், நுந்தா தீபம் எனப் பலவாறாக வழங்கப்பெறும். பூசை வேளைகளான காலை, நண்பகல், மாலை, இரவு முதலிய சந்திகளில் வைக்கப் பெறும் தீபம் சந்தியா தீபம் ஆகும்.

பூசைகளின்போது கோவில்களில் கடவுளரின் திருவுருவத்தின் முன் பலவித அலங்கார தீபங்கள் காட்டப்பெறுகின்றன. அவை அனைத்தும் ஆழமான பொருள் உடையன. தத்துவம் உடையன. கோவில் கருவறையில் வழிபாட்டுக்கு உரிய திருவுருவங்கள் அமைந்திருக்கும். கருவறையின் முன் உள்ள மண்டபம் ஒன்றில் வாகனம் அமைந்திருக்கும். வாகனம் மூலமூர்த்தியை நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கும். வாகனத்திற்குப் பின் பலிபீடம் இருக்கும். சிவன் கோவிலாக இருந்தால் மூலமூர்த்தியாகிய சிவலிங்கம் பதி, வாகனமாகிய எருது பசு, பலிபீடம் பாசம்,

     “ஆய பதிதான் அருட்சிவ லிங்கம்
     ஆய பசுவும் அடல்ஏறு எனநிற்கும்
     ஆய பலிபீடம் ஆகும்நல் பாசமாம்
     ஆய அரன் நிலைஆய்ந்து கொள்வார்கட்கே”


என்பது திருமூலர் திருமந்திரப் பாடலாகும்.

பிறகோவில்களிலும் இவ்வாறே மூலமூர்த்தியைப் பதியாகவும் வாகனத்தைப் பசுவாகவும், பலிபீட்த்தைப் பாசமாகவும் கொள்ள வேண்டும்.

பூசைக் காலங்களில் முதலில் திரை போடப்பெறும், பின் அலங்காரதீபம் காட்டும் போது திரை நீக்கப்பெறும், தீபம் காட்டும் அருச்சகர் பலவித அலங்கார தீபங்களை முறையாகக் காட்டுவார். ஆன்மாவின் பிரதிநிதியாகிய வாகனம், மூலமூர்த்தியைக் காணமுடியாமல் ஒரு மறைப்பு. திரோதானம் உண்டாக்குகிறது; அது ஆணவ மலம் எனும் தடையாகும். ஆணவ மலம் எனும் தடை நீங்கினால் – திரைநீங்கினால் மூலமூர்த்தியைக் காணலாம். அதுவும் நன்றாக காணமுடியாது. அருச்சகர் தீபம் காட்டினால் நன்றாகக் காணமுடியும். அருச்சகர் ஞானாச்சாரியரைக் குறிக்கும். விளக்கு ஞானத்தைக் குறிக்கும். மலம் நீங்க-ஞானாச்சாரியர் ஞானத்தைக் கொடுக்க – இறைவனைக் காணலாம்.

உலகத்தில் வெளிச்சம் வருதலும் இருள் நீங்குதலும் ஒரே சமயத்தில் நடைபெறும். அதுபோல ஞானாச்சாரியரால் ஞானம் வருதலும் மலம் நீங்கலும் ஒரேசமயத்தில் நடைபெறும். கோவிலில் திரை நீங்குதலும் அருச்சகர் அலங்கார தீபம் காட்டுதலும் ஒரேசமயத்தில் நடைபெறும். எனவே, விளக்கு ஞானத்தின் அறிகுறியாகும்.

“ஞான விளக்கை ஏற்றி வெளியாக உள்ள கடவுளை அறிந்து கொள்க, ஞானமாகிய விளக்கினால் முன்பு இருந்த துன்பங்கள் நீங்கும். இவ்வாறு ஞானமாகிய விளக்கின் தன்மையை அறிந்து கொண்டவர்களே வாழ்க்கையில் விளக்கம் பெற்றவர், ஞான விளக்கில் விளங்கித் தோன்றும் விளக்காக மாறுவார்கள்’ என்ற பொருளில்;

     “விளக்கினை ஏற்றி வெளியை அறமின்
     விளக்கினின் முன்னை வேதனை மாறும்
     விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
     விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!”


என்று திருமூலர் பாடியுள்ளார். ‘விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்’ என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளார். எனவே, கோவிலில் காட்டப்பெறும் அலங்கார தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.

பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை. பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன.

நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.

ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.

ஐந்து தட்டுக்களில் தீபம் ஏற்றி நான்கு திசைகளில் நான்கு, நடுவில் ஒன்று என்ற முறையில் அமைத்த – அவ்வமைப்புக்கு ஒற்றை விளக்குக் காட்டிப் பின் நடுத்தட்டு முதலாக ஐந்து தட்டுகளையும் தீபத்துடன் காட்டப் பெறும். ஐந்தும் இறைவனுடைய ஐந்து முகங்களைக் குறிக்கும். மந்திரங்களுள் பஞ்சப்பிரம மந்திரங்கள் சிறப்புடையன.

1. ஈசானம் 2. தத்புருடம் 3. அகோரம் 4. வாமதேவம் 5. சத்யோசாதம் என்ற ஐந்தும் பஞ்சப்பிரம மந்திரங்கள் எனப்படும். ஏனைய மந்திரங்களுக்கு முன்னே தோன்றியதாலும், ஏனைய மந்திரங்களுக்குக் காரணமாக இருப்பதாலும் பஞ்சப் பிரம மந்திரங்கள் சிறந்தன என்று சிவஞானசித்தியார் குறிப்பிடுகின்றது. அந்தந்த மந்திரங்களால் அந்தந்த முகத்தைத் தரிசிப்பது என்ற முறையில் ஐந்து தட்டுத் தீபங்கள் காண்பிக்கப்படுகின்றன. இறுதியாக கும்ப தீபம் காண்பிக்கப் பெறும்.

கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிக்கும். அனைத்தும் சதாசிவத்துள் ஒடுங்கும் என்ற முறையில் அமைந்த்து. விரிவாகப் பலவாறாக இருக்கும் தீபங்கள் முதல் கும்பதீபம் இறுதியாகக் புருட தீபம், மிருக தீபம், பட்ச தீபம், வார தீபம், ருத்ர தீபம் முதலிய தீபங்களும் விரிவாகக் காட்டும்போது காட்டப் பெறுவதுண்டு. அந்தந்தத் தீபத்திற்குரியவர்கள் அந்தந்த உருவில் வந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பது கருத்து.

தீபாராதனை செய்யும்போது மூன்று முறை காட்டவேண்டும். முதன் முறை காட்டுவது உலக நலங்கருதியது. இரண்டாம் முறை கோவில் உள்ள ஊர்மக்கள் நலங்கருதியது. மூன்றாம் முறை ஐம்பெரும் பூதங்களால் இடையூரின்றி நலம் பயக்க வேண்டும் என்பது கருதியது. காட்டும்போது இடப்பக்கத் திருவடியில் தொடங்கி இடை, மார்பு, கழுத்து, நெற்றி, உச்சி என்ற முறையில் உயர்த்தி வட்டமாக வலப்பக்கம் தோள், மார்பு, இடை, பாதம் என்ற அளவில் ‘ஓம்’ என்னும் பிரணவ வடிவில் காட்ட வேண்டும். மூர்த்தி பேதங்களுக்குக்கேற்பத் தீபாராதனை முறையில் வேறுபாடு உண்டு. தீபாராதனைக்குப்பின் கற்பூரம் காட்ட வேண்டும்.

தூய கற்பூரம் எரிந்தபின் எஞ்சியிருப்பது ஒன்றும் இல்லை. அதுபோல ஆன்மா-பாச ஞானம், பசு ஞானம் நீங்கி இறைவனின் திருவடியில் இரண்டறக் கலந்து இன்பம் துய்த்தல் வேண்டும்.

     “தீது அணையாக் கர்ப்பூரதீபம் என நான் கண்ட
     சோதியுடன் ஒன்றித் துரிசு அறுவது எந்நாளோ?”

என்று தாயுமானவர் இதனையே பாடியுள்ளார். அறியாமை நீங்கி இறையருள் பெறுவதே விளக்கு வழிபாட்டின் அடிப்படையாகும்.

     “ஆதிப்பிரானே! என் அல்லல் இருள் அகலச்சோதிப்
     பிரகாசமாய்த் தோற்றுவித்தால் ஆகாதோ?
     ஏதும் தெரியாது எனைமறைத்த வல்இருளை
     நாத! நீ நீக்கஒரு ஞானவிளக்கு இல்லையோ?”
    (தாயுமானவர்).