— ந. இரா. சென்னியப்பனார்
மக்கள் தொடக்க காலம் முதலே தம் சூழ்நிலைக்கேற்ப வழிபாடு செய்து வந்துள்ளனர். சிந்துவெளி, அரிக்காமேடு, ஆதிச்சநல்லூர் பையம்பள்ளி முதலியவிடங்களில் செய்த அகழ்வாய்வுகளில் வழிபாட்டுருவங்கள் பல கிடைத்துள்ளன. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் ஆகியவற்றில் தெய்வ உருவங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியன ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடிய பக்திப் பனுவல்களில் தெய்வ வழிபாட்டு முறை ஓரளவு செல்வாக்குப் பெற்றுள்ளது.
உருவ வழிபாடு
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் அருவம், அருவுருவம், உருவம் என்ற மூன்று நிலையில் உயிர்களுக்கு அருள் பாலிக்கிறான். இறைவனுக்கென்று தனியே ஓர் உருவம் இல்லை. உயிர்கள் உய்யும் பொருட்டு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப பல்வேறு வடிவங்கள் அமைத்துக் கொள்ளப் பெற்றன.
“நானா வித உருவாய்நமை ஆள்வான்”
“பல பல வேடமாகும் பர நாரிபாகன்”
என்று திருஞானசம்பந்தரும்
“பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை”
என்று திருநாவுக்கரசரும்
“வேறு வேறு உருவும் வேறு வேறு இயற்கையும்
நூறு நூறு ஆயிரம் இயல்பினதாகி”
“ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமே”
என்று மாணிக்கவாசகரும் குறிப்பிட்டுள்ளனர்.
உருவத்தையுடைய நமக்கு உருவமுடைய ஒரு பொருளை எளிதில் கண்டுகளிக்க முடியுமே தவிர உருவமற்றதைக் காண முடியாதாகையால் நமக்கிரங்கி அவன் திருவுருவத்தைக் கொண்டான். அருவமான கடவுளை, நாம் பேதத்தோடு கலந்துறையும் காலம் வரை உருவமாகக் கண்டு களிக்க முடியுமே தவிர அருவமாகக் கண்டு அடைய முடியாது.
இறைவன் உருவத்திருமேனி கொண்டு வந்தால் தான் எளிதில் காணமுடியும்.
“இல்லா முலைப்பாலும் கண்ணீரும் ஏந்திழைபால்
நல்லாய்! உளவாமல் நீர்நிழல்போல் – இல்லா
அருவாகி நின்றானை யாரறிவார் தானே
உருவாகித் தோன்றானேல் உற்று. ”
என்று சாத்திரமும் உருவத் திருமேனியை உயர்த்திக் காட்டுகிறது. வழிபடப்பெறும் உருவங்களுள் விநாயகர் திருவுருவமும் ஒன்றாகும்.
தொன்மைச் சான்றுகள்:
வேத உபநிடதங்களில் விநாயகரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ‘கணபதி என்ற சொல் ஆட்சி ரிக் வேதத்தில் காணப்படுகிறது. அதனைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உண்டு. கணங்களுக்குத் தலைவர் கணபதி என வழங்கியிருக்கலாம். பதினெண்கணங்கள் குறிப்பிடப் படுகின்றன. ‘பதினெண் கணனும் ஏத்தவும் பெறுமே’ என்றும் ‘ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர்’ என்றும் தமிழ் இலக்கியங்களும் பதினெண் கணங்களைக் குறிப்பிட்டுள்ளன.
தைத்திரிய ஆரண்யகத்தில் இறைவனைத் ‘தந்திரன்’ என்று அழைக்கின்றது. இதற்குத் தந்தத்தை உடையவர் என்பதே பொருள். ஆகவே இச் சொல் பிள்ளையாரைக் குறிப்பதே என்று துணியலாம். கணபதி காயத்திரியிலும் ‘தந்தோ தந்திந் பிரசோதயாத்’ என்று தந்திந் என்று பெயர் குறிப்பிடப் பெற்றுள்ளமை இக் கருத்தை வலியுறுப்பதாகும்.
யசூர் வேதத்துடன் தொடர்புடையது மானவ கிருத்ய சூத்திரம் என்ற கல்பசூத்திரம் ஆகும். அதில் சாலகடங்கர் கடஷ்மாண்ட ராஜ புத்திரர், உஸ்மிதர் , தேவயாஜனர் என்று நான்கு விநாயகர்கள் குறிக்கப் பெற்றனர். வியாசர் இயற்றிய மகாபாரதத்தை விநாயகர் எழுதினார் என்று மரபு வழியாகக் கூறப்பட்டு வருகிறது. வடமொழிப் புராணங்கள் பலவற்றில் விநாயகர் வழிபாடு குறிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் விநாயகர் வழிபாடு:
வெளிநாடுகளில் விநாயகர் வணக்கம் பண்டுதொட்டே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் விநாயகர் வழிபாடு பண்டு தொட்டே செல்வாக்குப் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானத்தில் பல்வேறு இடங்களில் பழைய விநாயகர் உருவங்கள் அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் அண்மையில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானத்தில் காபூல் நகருக்கு மைல் அருகேயுள்ள ஸகர்தார் (சங்கரதாரா) என்னும் ஊரில் மனதைக் கவரும் வேலைப்பாடு பெற்ற சிற்பங்கள் பூமியிலிருந்து வெளிப்பட்டன.
அவை முறையே சூரியன், சிவன் மற்றும் மஹாவிநாயகர் என்று சொல்லப்படும் பரமசிவன் மகன் பிள்ளையார் ஆகிய படிமங்களாக ஆராய்ச்சியாளர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
விநாயகரின் தேகக் கட்டையும், வஸ்திரத்திலுள்ள அகான்தஸ் இலைச் சித்திரத்தையும், சிற்பப் பாங்கையும் சீர்தூக்கின் குஷானர்களுக்கும், குப்தர்களுக்குமிடையே நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலே இப்படிமம் செய்யப்பட்டுள்ளதெனலாம். தற்காலம் காபூல் வாழ் இந்துக்கள் இவ் விநாயகப் படிமத்தை நரஸிங்கத்வாலி என்னும் காபூல் நகரிலுள்ள அங்காடியில் கோயில் செய்து வணங்கி வருகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் கர்டெஸின் அருகாமையில் சலவைக்கல்லில் செதுக்கப்பட்ட விநாயகர் படிமம் தோண்டி எடுக்கப்பட்டது. தற்காலம் காபூலில் தர்காபீர்ரதன் நாத் என்னுமிடத்தில் இவ் விநாயகர் கோயில் கொண்டு காபூல் வாழ் இந்துக்களால் வணங்கப்பட்டு வருகிறார். படிமம் 28" உயரம் , 14" அகலம் கொண்டது. அதன் பீடத்தில் இரண்டு வரி கொண்ட கல்வெட்டுச் சாசனம் காணப்படுகிறது. மொழி சமஸ்கிருதம் .எழுத்து தொன்மையான நாகரி லிபி.
தமிழ் இலக்கியங்களில் விநாயகர்:
தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் விநாயகரைப் பற்றிய செய்தியில்லை. கடவுள், தெய்வம் என்ற பொது நிலையும், சிவன், முருகன், திருமால், பலதேவன், கொற்றவை என்ற சிறப்பு நிலையும், சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. பின் தோன்றிய அற நூல்கள், காப்பியங்கள் ஆகியவற்றிலும் விநாயகர் பற்றிய செய்தியில்லை. மணிமேகலையில் கரகம் கவிழ்க்கப்பட்டு காவிரியோடு வந்த செய்தி காணப்படுகிறது. பிற்காலத் தமிழ் நூல்கள் விநாயகரோடு தொடர்பு படுத்தி இதனைக் குறிப்பிடுகின்றன.
பல்லவர் காலச் சிற்பங்களில் முதன்முதலில் புடைச்சிற்பமாக விநாயகர் காணப்படுகிறார். திருஞானசம்பந்தர் விநாயகரைக் குறிப்பிட்டுள்ளார்.
“பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே”
என்ற பாடல் அனைவரும் அறிந்ததேயாம்.
“நெற்றியின் கண் மருப்புறு வங்கண்ணத்தாதை”
“செற்றிட்டேவெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்புறும்
சேரே வாரா நீள் கோதைத் தெரியிழை பிடியதுவாய்
ஒற்றைச்சேர் முற்றக் கொம்பு டைத்தடக்கை முக்கண்மிக்கு
ஓவாதேபாய் மாதானத்துறு புகர்முக இறையைப் பெற்றிட்டே”
“தந்த மதத்தவன் தாதையோதான்”
“கரியின் மாமுகதுடைய கணபதி தாதை”
என்பன ஆளுடையப் பிள்ளையால் குறிப்பிடப் பெற்ற மூத்த பிள்ளையாரைப் பற்றியனவாகும்.
திருநாவுக்கரசரும் மூத்த பிள்ளையாரைச் சுட்டிப் பாடியுள்ளார்.
“பலபல காமத்தராகிப் பதைத் தெழுவார் மனத்துள்ளே
கல மலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்”
“பிள்ளையாரவர் பேரெயிலாளரே”
“கோவாய இந்திரனுள் ளிட்டாராகக்
குமரனும் விக்கின விநாயகன்னும்”
“கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும்
கயாசுரனை அவனாற் கொல்வித்தார் போலும்”
“முந்தை காண், மூவரினம் முதலானான் காண்
மூவிலை வேல் மூர்த்திகாண், முருக வேட்குத்
தந்தை காண், தண் கடமா முகத்தினாற்குத் தாதை காண்”
“விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்”
என்பன ஆளுடைய அரசு தரும் அரிய செய்திகளாகும்.
நம்பியாரூரர் இறைவனோடு தோழமையுள்ளவர். நட்புத்திறந் தோன்றப் பாடுவதில் வல்லவர்.
“திங்கள் தங்கு சடைகள் மேலோர் திரைகள் வந்து புரளவீசும்
கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறுதாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கோல் தட்டியாளார்
உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் தளியுளீரே”
என்ற பாடலில் கணபதியை வயிறுதாரி எனக் குறிப்பிட்டுள்ளார்.
திரிபுரத்தை அழிக்க இறைவன் பூமியாகிய தேரில் சென்றபோது முதலில் விநாயகரை வழிபடாது புறப்பட்டமையால் அத்தேரின் அச்சினை அவர் ஒடித்தார் என்ற செய்தி பலராலும் பாராட்டிப் பாடப்பட்டுள்ளது.
“தச்சு விடுத்தலும் தாமடியிட்டலும்
அச்சு முறிந்ததென்றுந் தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற”
என்று மாணிக்கவாசகர் அச்சு முறிந்ததைக் குறிப்பிட்டுள்ளார். விநாயகர் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடாவிட்டாலும் இசையெச்சம் ஆக அமைந்துள்ளது. பின்வந்த அருணகிரிநாதர்,
“முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா”
என்று அச்செய்தியை அழகாகச் சுட்டியுள்ளார்.
திருவிசைப்பாவில் விநாயகரைப் பற்றிய குறிப்பு வருகின்றது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் பலரும் விநாயகர் பற்றிய பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளனர். வீரசோழியம், தண்டியலங்காரம் ஆகிய இலக்கணங்களில் விநாயகர் பற்றிய பாடல்கள் காணப்பெறுகின்றன. கல்லாடம், முத்தொள்ளாயிரம், ஞானாமிர்தம், புறப்பொருள் வெண்பா மாலை, சேந்தன் திவாகரம் முதலிய நூல்களுக்குக் கடவுள் வாழ்த்து முதல் பாடல் விநாயகரைப் பற்றிய பாடலாக உள்ளது.
விநாயகர் வழிபாட்டின் செல்வாக்கு:
நரசிம்ம பல்லவனின் படைத்தலைவரான பரஞ்சோதியார் வாதாபிப் போரில் புலிகேசியை வென்று கணபதீச்சரம் கட்டினார் என்ற வரலாற்றுச் செய்தி மரபாகக் கூறப்பட்டு வருகிறது. இது பற்றிப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு. திருவாரூர், செங்காட்டங்குடி ஆகிய இடங்களில் உள்ள விநாயகர் வாதாபி கணபதி என்றே அழைக்கப்படுகிறார்.
பிற்காலச் சோழர் காலத்தில் பல கோவில்களில் விநாயகர் உருவங்கள் அமைக்கப்பட்டன.வழிபாட்டில் தனிச் சிறப்புப் பெற்றது. கி.பி. 907–953ல் அரசாண்ட முதற்பராந்தக சோழன் 13ஆம் ஆட்சியாண்டில் நாவலூருடையான் கண்டான் என்பான் பழுவூர் அகத்தீசர் கோயிலுக்குக் கணபதி படிமம் செய்து கொடுத்ததைக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
சோழர்களில் புகழ்பெற்ற முதலாம் இராசராசன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி அதற்குப் பலதானங்களையும் செய்துள்ளான். அக்கோயிலில் அமைத்த பிள்ளையார்க்கு நாள் தோறும் நூற்றைம்பது வாழைப்பழம் அமுது செய்து ஏற்பாடு செய்தான்.
‘ஸ்வஸ்தி ஸ்ரீ உடையார் ஸ்ரீ ராசராசதேவர் ஆலயத்துப் பிள்ளையார் கணபதியார்க்கு வாழைப்பழம் அமுது செய்தருள உடையார் பண்டாரத்து பொலிசையூட்டுக்கு வைத்தருளின காசும், இக்காசு பொலியூட்டுக்குக் கொண்ட அங்காடிகளும் கல்லில் வெட்டியது. ஆலயத்துப் பிள்ளையார் கணபதியார்க்கு அமுது செய்தருள, நிசதம் வாழைப்பழம் நூற்றைம்பதாக ஒராட்டைக்கு வந்த வாழைப்பழம் ஐம்பத்து நாலாயிரத்துக்கு காசு ஒன்றுக்கு வாழைப்பழம் ஆயிரத்திருநூறாக வந்த காசு நாற்பத்தஞ்சுக்கு’ என்று கல்வெட்டு கூறுகிறது.
தஞ்சைப் பெரிய கோயில் கணபதிக்கு ஒரு நாளைக்கு நூற்றைம்பது வாழைப்பழம் ஓராண்டுக்கு (150 x 360 = 54000 ) ஐம்பத்து நாலாயிரம் வாழைப்பழம் அமுது செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அக்காலச் சோழர் பொற்காசு ஒன்றுக்கு ஆயிரத்து இருநூறு வாழைப்பழம். ஐம்பத்து நாலாயிரம் வாழைப்பழத்துக்கு, நாற்பத்து ஐந்து காசு (54000 / 1200 = 45 ) வருமானம் வர ஏற்பாடு செய்ததை இக்கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகின்றது. இதனால் சோழர் காலத்தில் விநாயகர் வழிபாட்டின் செல்வாக்குப் புலனாகிறது.
நம்பியாண்டார் நம்பி
நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரை வழிபட்டு அருள் பெற்றவர். தந்தையார் வெளியூர் சென்ற போது சிறுவனாக இருந்த நம்பியாண்டார் பிள்ளையார்க்கு அமுது வைத்து முறையாகப் பூசை செய்தார். அமுதைப் பிள்ளையார் உண்பார் என எதிர்பார்த்தார். உண்ணாமையால் பூசை முறையில் ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது எனக் கருதித் தலையைக் கல்லில் மோதத் தொடங்கினார்.
உடனே பிள்ளையார் அவரைத் தடுத்து உண்ணத் தொடங்கினார். மகிழ்ந்த நம்பிகள் நேரமாகி விட்டதால் பள்ளிக்குச் சென்றால் ஆசிரியர் ஒறுப்பார் எனக் கூறினார். பிள்ளையார் திருவருள் பெற்ற நம்பியாண்டார் நம்பி அவர்மீது திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை எனும் பக்திப்பனுவலைப் பாடி பரவினார்.
“என்னை நினைத்து அடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் – புன்னை
விரசுமகிழ் சோலை வியன்நாரையூர் முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத்தான்.”
என்பது அவ்வந்தாதியின் முதற் பாடாலாகும்.
சிவபெருமானிடம் இருந்த மாங்கனியைப் பெறுவதற்காக முருகப்பெருமானும் மூத்த பிள்ளையாரும் உலகைச் சுற்றி வரும் போட்டியில் முயன்றனர். முருகன் மயில் மீதமர்ந்து உலகைச் சுற்றி வரத் தொடங்கிய போது மூத்த பிள்ளையார் உலக வடிவமாகிய சிவபெருமானையே வலம் வந்து மாங்கனியைப் பெற்றார் என்பது புராண வரலாறு ஆகும்.
“கொம்பனைய வள்ளி கொழு நன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் நம்பனையே
தன்னவலஞ் செய்து கொளும் தாழ்தடக்கையாய் என்னோய்
பின்னவலஞ் செய்வதெனோ பேசு. ”
என்று பாடியுள்ளார்.
விநாயகர் திருவிரட்டை மணிமாலையாகிய இப்பணுவல் கபிலதேவ நாயனார் பாடிய மூத்த பிள்ளையார் திருவிரட்டை மணிமாலையை அடியொற்றி அமைந்ததாகும். அதிராவடிகள் என்பார் மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை என்ற நூலைப் பாடியுள்ளார்.
“மொழியின் மறைமுதலே முந்நயனத்தேறே
கழிய வரு பொருளே கண்ணே - தொழிய
கலாலயனே எங்கள் கணபதியே நின்னை
அலாது ஐயனே சூழாதென் அன்பு”
விநாயகர் வழிபாடு பெற்றிருந்த செல்வாக்கு இதனால் தெரிய வருகிறது.
விநாயகர் புராணம்:
பல சிற்றிலக்கியங்கள் மூத்த பிள்ளையார் பற்றி எழுந்தன. சிற்றிலக்கியங்கள், புராணங்கள், காப்பியங்கள் முதலிய எவ்வகை இலக்கியங்கள் பாடினாலும் முதலில் விநாயகர் வணக்கம் பாடும் மரபு உண்டாயிற்று. குமரகுருபரர், சிவப்பிரகாசர், சிவஞான முனிவர் முதலியோர் அம்மரபை நிலை நாட்டினர். கச்சியப்ப முனிவர் விநாயகர் புராணத்தை இயற்றினார். விநாயகரின் பலவித அவதாரங்கள், வழிபாட்டு முறை, விரதமேன்மை, வழிபட்டு பயன்பட்டோர் முதலியவன பற்றி விரிவாகப் புராணத்தில் பாடியுள்ளார்.
திருவுருவ அமைப்பு:
யானைத்தலை, துதிக்கை, பேழை வயிறு, நான்கு கைகள், வலப்பக்கம் ஒடிந்த தந்தம், இடப்பககம் தந்தம் பாம்பாலான உதரபந்தனம் கைகளில் பாசம், அங்குசம், மோதகம் ஆகியன அமைந்த நிலை மூசிக வாகனம் என்ற பொது அமைப்பில் திருவுருவம் அமைந்திருக்கும்.
யானை முகம் அமைந்ததற்குப் புனைக் கதைகள் பலவாறாகக் கூறப்படுகின்றன. யானையின் குரல் ஒலி உலகில் உண்டாகும் மற்ற ஒலிகளைக் காட்டிலும் ஓங்காரப் பிரணவ ஒலியை நன்கு ஒலிப்பதால் யானை முகம் இவர்க்கு அமைக்கப்பட்டது என்பது ஆறுமுக நாவலர் கருத்து.
யானை விலங்கினங்களுக்குள் மிகப் பெரியது, ஆற்றல் மிக்கது, எதனையும் வருத்தமின்றியே சுமப்பது, எத்துணைப் பெரிய படையாயினும் அஞ்சாது அழித்து வெற்றிகாணும் பெற்றியது. படைக்கெல்லாம் படையாயிருப்பது, காலம் வருந்துணையும் காத்திருந்து எதிரியை அழிக்கும் பண்புடையது, உணவு கொடுத்து அன்புடன் பாதுகாக்கும் பாகர் தன் காலில் அடிவைத்தால் முடிமேல் வைத்து உயர்த்துவது, அவர்களுக்கு இடுக்கண் வராமல் பாதுகாப்பது, அவர்கள் கட்ட விரும்பினால் விரும்புமிடத்திற்குச் சங்கிலியையும் தானே கொண்டு போய்க் கொடுத்து அவர்கள் கட்டிலகப்பட்டு நிற்பது. இத்தனை குணங்களும் விநாயகர்க்கும் உண்டு என்று தண்டபாணி தேசிகர் கூறுகிறார்
எல்லாம் தன்னுள் அடங்கும் என்பதனைக் காட்டப் பெரிய பேழை வயிறமைந்துள்ளது. ஓங்காரத்துள் எல்லாம் அடங்கும், விநாயகர் உருவத்துள் எல்லாம் அடங்கும். இடது மேல்கையில் அங்குசம் அமைந்திருக்கும். உயிர்களின் கன்மங்களைக் கட்டுதற்குப் பாசம் அமைந்துள்ளது. வலது மேல்கையில் அங்குசம் அமைந்திருக்கும். ஏனைய யானைகளை அடக்கப் பாகர் அங்குசம் வைத்திருப்பர். விநாயகராகிய யானையை அடக்குவார் யாவரும் இல்லை. அவரே பத்தர்தம் வஞ்சனையைச் செய்யும் புலன்களை அடக்க வல்லார், அதற்காகவே அங்குசம் தரித்துள்ளார்.
இடது கீழ்க்கை மோதகத்தை வைத்திருக்கும், துதிக்கை அதனைத் தொட்டுக் கொண்டிருக்கும். உயிர்களுக்கு அஞ்சாமையைப் போக்கி இன்பத்தைத் தருவதைக் காட்டும். துதிக்கை ஆன்மாக்களுக்கு பேரின்பத்தை வாரி வீசுவது, பத்தர்களின் உணர்வை அறிந்து கொள்ள உதவுவது துதிக்கையாகும்.
வலது கீழ்க்கையில் ஒடிந்த தந்தம் எழுத்தாணியாக அமைந்திருக்கும். பாரதம் எழுதவும், கயாசூரனைக் கொல்லவும் பயன்பட்டது. யாவருக்கும் ஞானத்தைத்தரவும், பகையைப் போக்கவும் உதவுவது.
“வேத சாத்திரம் மிகுதி புராண கலை ஞானம்
விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம்
நாத முடிவான எல்லாம் பாச ஞானம்”
என்கிறது சிவஞான சித்தியார்.
ஆதலால் பாரதம் பாசஞானம். எனவே ஒடிந்த வலக்கொம்பு பசுஞானத்தையும். ஒடிந்த இடக்கொம்பு பதிஞானத்தையும் காட்டும். உதரபந்தமாகிய பாம்பு குண்டலனி சக்தியைக் காட்டும்.
மூசிக வாகனத்திற்கு புராணக் கதையுண்டு. விநாயகர் ஓங்காரப் பிரணவ ரூபி என்ற போது அது மகா பெரிய அண்டங்களையும் தனதுட் கொண்ட மகா பிரமாண்ட வடிவமென நமக்குப் படுகிறது. அவருக்கு வாகனம் மூஞ்சூறு என்ற போது மூஞ்சூறு தாங்கத் தக்க சிற்றுருவினர் என்பதும் தெரிகிறது. ஆதலால் கடவுள் அணுவுக்கணுவாயும், மகத்துக்கு மகத்தாயும் இருக்கிறார் என்பதை உணர்த்த மூஞ்சூறு வாகனமதாயிற்று.
தாழ்செவி இரண்டும் உயிர்களுக்கு மலவாசனை வாராமல் காப்பது. மேல் உருவ அமைப்புப் பலவாறக மாறி அமைவதுண்டு எல்லா உருவங்களிலும் திருவடி இரண்டேயிருக்கும். ஞானசக்தி, கிரியா சக்தி என்றும் இரண்டு திருவடித் தாமரைகள் என்பதனைக் காட்டுவதற்கேயாம்.
திருவுருவ வேறுபாடு:
நின்ற நிலை, அமர்ந்த நிலை, நடன நிலை, பள்ளிகொண்ட நிலை சக்தி மடியிருந்த நிலை, சித்திபுத்தி என்ற இருதேவியருடன் நின்ற நிலை, மூசிக வாகனத்திலமர்ந்த நிலை முதலிய பல நிலைகளில் திருவுருவங்கள் அமைந்திருக்கும். பால கணபதி, தருண கணபதி முதலிய முப்பத்திரண்டு வகைத் திருவுருவங்கள் கூறப்படுகின்றன. ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகளும் உண்டு.
வழிபாட்டு முறை:
திருக்கோயிகளின் மூலவர் கல் உருவத்திலும் உற்சவர் செப்பு உருவத்திலும் அமைந்திருக்கும். அவையல்லாமல் மரம், மண், சாணம், மஞ்சள், மாக்கல், வெள்ளைக்கல், பளிங்கு, வெல்லம், சந்தனம் முதலியவற்றாலும் விநாயகர் செய்து வழிபடுவது உண்டு. கோயில்களில் ஆகம முறைப்படி திருவுருவங்களில் எழுந்தருளச் செய்து முறையாக வழிபாடு நடைபெறும். தனியாக வேண்டும்போது சாணம், மஞ்சள் முதலியவற்றால் உருவம் செய்து வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது. நன்மை, தீமை அனைத்திலும் பிள்ளையார் வழிபாடு உண்டு. செய்வதற்கு மிகமிக எளிமையானது பிள்ளையார் வழிபாடாகும்.
வழிபாட்டிற்குரிய பூக்கள்:
மூத்த பிள்ளையாருக்கு எல்லாம் பூக்களும் பச்சிலைகளும் வழிபாட்டிற்குரியன. அறுகு, வன்னி மிகச் சிறப்புடையன. இரண்டும் பற்றி விநாயக புராணம் விரித்துக் கூறுகிறது. மதுசூதனன் என்ற அந்தணன், சுபலன் என்ற அரசன், சுபத்திரை என்ற அவன் மனைவி ஆகியோர் ஒருவரையொருவர் சபித்துக் கொண்டு முறையே கழுதை, காளை, புலைச்சி ஆயினர். ஒரு விநாயக சதுர்த்தியன்று விநாயகர் மீது அபுத்தி புண்ணியமாக அறுகை வீசிய காரணத்தால் தெய்வ வடிவம் பெற்றனர். அனலாசூரன் என்பவனை விநாயகர் விழுங்கினார். அப்போதுண்டான வெப்பத்தை யாராலும் எவற்றாலும் போக்க முடியவில்லை. எண்ணாயிர முனிவர் அறுகையிட்டு வைத்திருந்த நீரைச் சொரிந்தனர். வெப்பம் நீங்கிற்று. இன்றும் வெப்பத்தை நீக்கவும் நோய் நீக்கவும் அறுகு பயன்படுகின்றது. அதனால் அறுகு வழிபாட்டிற்கு மிகச் சிறந்ததாயிற்று.
சாம்பன் என்ற மன்னனும் அமைச்சர்களும் வேடர்களும் பிறந்து காட்டில் திரிந்த போது வன்னி இலைகளை விநாயகர் மீது அறியாமலே உதிர்த்தனர். பாவம் நீங்கிச் சிறப்புற்றனர். புருசுண்டி முனிவரை இகழ்ந்தால் சமியும் அவள் கணவன் மந்தாரனும் வன்னி மரமாகவும், மந்தாரை மரமாகவும் ஆயினர். விநாயகர் திருவருளால் நலம் பெற்றனர். பாவத்தை நீக்குவது வன்னியிலை, இன்று சிறந்த மருந்தாகவும் பயன்படுகின்றது. ஆதலால் விநாயகர்க்கு ஏற்றதாயிற்று. புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை ஆகிய எட்டு மலர்கள் வழிபாட்டிற்கு சிறப்புடையன.
வழிபாட்டிற்குரிய சிறந்த பாடல்கள்:
மூத்தப் பிள்ளையாருக்குத் தோத்திரப் பாடல்கள் மிகுதியாக உள்ளன. ஒளவையார் பாடிய ‘சீதக் களபச் செந்தாமரைப்பூம், பாதச் சிலம்பு பலவிசை பாட’ எனத் தொடங்கும் விநாயகர் அகவல் நாள்தோறும் பாராயணம் செய்தற்குரியது. விநாயக புராணத்தில் வரும் ‘பந்தம் அகற்றும் அனந்த குணப் பரப்பும்’ எனத் தொடங்கும் பாடல் முதல் உள்ள எட்டுப் பாடல்களும் வழிபாட்டிற்குச் சிறப்புடையன.