Wednesday, 28 November 2012

திருக்கோயில் திருவிழாக்கள்

—  ந. இரா. சென்னியப்பனார்

தமிழகத்தில் திருக்கோயில்கள் மிக்குள்ளன. கோயில்களில் நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்று வருகின்றன. ‘எடுக்கும் விழவும் நன்னாள் விழவும்’ என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். திருக்குறளில், ‘சிறப்பொடு பூசனை’ எனக் குறிப்பிடப்படுகின்றது. பூசனை, நன்னாள் விழவு என்பன நாள்தோறும் நடைபெறுவன.

வடமொழியில் நித்தியபூசை எனப்படும், சிறப்பு எடுக்கும் விழவு என்பன விழாக்கால வழிபாடுகள் ஆகும். இது வடமொழியில் நைமித்திகம் எனப்படும். சிறப்பு வழிபாடு - ஆண்டுத் தொடக்கமான சித்திரை முதல் நாள், ஆடிப் பதினெட்டு, மார்கழித் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம், முதலியனவாகும்.

விழாக்கால வழிபாட்டில் தலங்களுக்கு ஏற்பப் பெருந்திரு (மகோத்சவம்) விழா நடைபெற்று வருகின்றது. திருக்கோயில் அமைந்த இடத்திற்கேற்ப, அங்குள்ள மக்கள் வாழ்க்கைக்கு ஏற்ப, காலத்திற்கேற்பத் திருவிழாக்கள் அமையும். முருகப் பெருமான் கோயில்கள் பெரும்பாலும் தைப்பூசத்தையொட்டி திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

அவிநாசி முதலிய தலங்களில் சித்திரையிலும், திருவண்ணாமலையில் கார்த்திகையிலும், பேரூர், மயிலாப்பூர் முதலிய இடங்களில் பங்குனியிலும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான கோயில்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

திருவிழாத் தொடங்குவதற்கு முந்திய நாள் மண்ணெடுத்தல், முலையிடுதல் நடைபெறும். எடுத்த சுத்த மண்ணைப் பதஞ்செய்து அதில் விதைகளை இட்டு முளைக்கச் செய்வர். இது இறைவன் செய்யும் ஐந்தொழிலில் படைத்தல் தொழிலைக் குறிக்கும்.

முதல் நாள் கொடியேற்றம் நடைபெறும். இறைவன் கோயிலில் எருதுக் (ரிஷபக்) கொடி, முருகன் கோயிலில் சேவற்கொடி அல்லது மயில் கொடி, திருமால் கோயிலில் கருடக் கொடி, அம்மன் கோயிலில் சிங்கக் கொடியும் ஏற்றப் படுகின்றன. துணியில் உருவம் எழுதப் பெற்று வழிபாட்டில் வைத்துப் பூசித்துக் கயிற்றில் கட்டிக் கொடிமரத்தின் உச்சியில் ஏற்றுவர். திருவிழாவுக்கு வரும் அடியார்களைத் திருவருள் உயர்த்தி நற்கதிக்குச் செலுத்தும் என்பதே இதன் அடிப்படை உண்மையாகும்.

இரண்டாம் நாள் — சூரியப் பிரபை, சந்திரப் பிரபை ஆகியவற்றில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி உலா வருவர். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கு வாழ்வத்ற்குச் சூரிய வெப்பம் மிகவும் தேவை. சூரிய வெப்பம் நீர் நிலைகளில் உள்ள நீரை நீராவியாக்கி மேகமாக மாற்றுகிறது; மேகம் மழை பெய்கிறது. சந்திரன் இன்பத்தைத் தருகிறான். சூரிய சந்திர பிரபைகளில் உலா வருவது காத்தல் தொழிலை குறிக்கும்.

மூன்றாம் நாள் — பூத வாகனம், சிம்ம வாகனங்களில் உலா வருவது உண்டு. பூதம் இறைவன் சொரூபம் பெற்றது. சிம்மம் ஆற்றல் பெற்றது. பூத கணங்கள் இறந்த ஆன்மாக்களைக் கொண்டு செல்லும், சிங்கம் பிற விலங்கினங்களைக் கொன்று தின்னும், இரண்டும் அழித்தல் தொழிலுக்குரியன. எனவே பூத வாகனம், சிம்ம வாகனம் ஆகியவற்றில் உலா வருதல் அழித்தல் தொழிலைக் குறிக்கும்.

நான்காம் நாள் — காமதேனு, நாகப்பாம்பு, மலர்ப்பல்லக்கு ஆகியவற்றில் தலத்திற்கேற்ப ஒன்றிலோ, இரண்டிலோ உலா வருவது உண்டு. காமதேனு பாலை மடியில் மறைத்துள்ளது. பாம்பு, புற்றில் மறைந்திருந்து வேண்டும் போது வெளிவருவது நஞ்சு, மாணிக்கம், படம் ஆகியவற்றை மறைத்துக் கொண்டு வேண்டும் போது வெளிப்படுத்தும். மலரில் மணம் மறைந்திருந்து உரிய காலத்தில் வெளிப்படும். இறைவன் மறைந்திருந்தே அருள் செய்வான், எனவே இது மறைத்தலைக் (திரோபவம்) குறிக்கும்.

ஐந்தாம் நாள் — ஏறு ஊர்ந்தான் (ரிஷபவாகன) இன்பக் காட்சியாகும். இறைவன் அடியார்களுக்கு எருது வாகனத்தில் தோன்றியே காட்சி கொடுத்துள்ளான், எருது மாசு அற்றது, வெண்மையானது, மலம் நீங்கி அருளுடன் கூடிய ஞானத்தைக் காட்டி நிற்கின்றது.

எனவே, ஐந்தாம் நாள் அருளலைக் (அநுக்கிரகம்) குறிக்கும். ஆதலால் திருவிழாவில் ஐந்தாம் நாள் பக்தர்களுக்கு மிகச் சிறப்பு வாய்ந்தது. அன்று நாயன்மார்களும் உலா வருவர். அவிநாசி, மயிலாப்பூர் முதலிய தலங்களில் ஐந்தாம் நாள் விழாவை ‘அறுபத்து மூவர் காட்சி’ என்றே அழைப்பதை இன்றும் காணாலாம்.

ஆறாம் நாள் — வெள்ளை யானையில் உலா வருவதும் உண்டு. யானை ஒரே பிண்டமான பருத்த உடல், கால்கள் முதலியவற்றை உடையது. விலங்கினங்களில் மிகப் பெரியது, ஆற்றல் மிக்கது, பாகர் தன் காலில் அடிவைத்தால் மேலே ஏற உதவுவது, கட்ட விரும்பினால் தானே சங்கிலி எடுத்து தருவது - இத்தகைய யானை மேல் இறைவன் உலா வருவது ‘பக்தி வலையில் படுவோன் காண்க’ (திருவாசகம்) என்பத்கேற்ப அடியார் பக்திக்கு இரங்கி அருள் செய்வான் என்பதைக் குறிக்கும்.

ஏழாம் நாள் — தேர்த் திருவிழாவாகும். பண்டைக்காலத்தில் அரசர்களுக்குத் தேரே சிறந்த வாகனம் ஆகும். தேர்களில் மிகச் சிறந்த உயர்ந்த தேரைத் கடவுளர் வீதி வலத்திற்குப் பயன்படுத்தினர். இறைவன் பூமியாகிய தேரில் ஏறித் துன்பம் செய்த திரிபுரத்தவர்களை அழித்து மற்றவர்களைக் காத்தான். தீமை அழித்து அடியார்களைக் காப்பது தேர்த் திருவிழாவாகும். தேர் அமைப்பு முழுவதற்கும் தத்துவப் பொருள் கூறுவது உண்டு.

எட்டாம் நாள் — இறைவன் குதிரை வாகனத்திலும், இறைவி அன்னம் அல்லது கிளி வாகனத்திலும் உலா வருவர். குதிரைக்கு வாசி என்று பெயர். வாசியோகத்தைச் சுட்டும். யோகியர்க்கு எளிதில் அருள் செய்வான் என்பதனைக் குறிக்கும். அன்னம் நீரை விட்டுப் பாலை பருகும். அம்மை குற்றம் நீக்கிக் குணம் பாராட்டுவாள். கிளி சொன்னதைச் சொல்லும். அம்மை உயிரினங்களுக்குத் திருவருள் வீழ்ச்சியைத் (சத்தி நிபாதம்) தருவாள். எட்டாம் நாள் கொங்கு நாட்டுக் கோயில்களில் வேடுபறி அல்லது பரிவேட்டை என்று கொண்டாடப் பெறும். திருமுருகன் பூண்டியில் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் வேடுபறி செய்ததை அடிப்படையாகக் கொண்டே இவ்விழா நடைபெறுகிறது. வாழ்க்கையில் பக்தியினால் இழந்ததை மீண்டும் பெறலாம் என்பதையே இவ்விழா குறிக்கின்றது.

ஒன்பதாம் நாள் — தெப்பத்தேர்த் திருவிழாவாகும். தெப்பக் குளத்தில் நீர் நிறைத்து மிதவை அமைத்து, அதன்மேல் மலர்ப் பல்லக்கில் இறைவன், இறைவிகளை எழுந்தருளச் செய்து தெப்பக்குளத்தின் உள்ளேயே சுற்றிவருவது உண்டு. பெரிய கோவில் உள்ள ஊர்களில் தெப்பக்குளம் அமைந்திருப்பதை இன்றும் காணலாம். நீரில் மிதந்து வருவது போல் இறைவன் அடியார்களின் அன்பு வெள்ளத்தில் மிதந்து அருள்செய்வான் என்பதைக் காட்டும்.

பத்தாம் நாள் விழாக் கொங்கு நாட்டில் தரிசனம் என வழங்கப் பெறுகின்றது. சிவன் கோயிலாக இருந்தாலும் முருகப் பெருமான் கோவிலாக இருந்தாலும் பத்தாம் நாள் நடராசர் தரிசனமாகும். அதிகாலையில் நடராசப் பெருமானுக்கும் சிவகாமி அம்மைக்கும் திருமஞ்சனம் செய்து வீதியில் உலாவரச் செய்வர். வெளியில் வந்ததும் பட்டிசுற்றல் நடைபெறும். இதுவும் கொங்கு நாட்டிற்கே உரியது. ஆடு, மாடு அடைக்கும் இடம் பட்டியாகும். கால்நடைகளுக்கு இரங்கி அருள் செய்கிறான் என்பதைக் குறிக்கும்.

திருவிழாக்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களை அடிப்படையாகவே கொண்டு அமைந்திருக்கும். நடராசர் தரிசனம் ஐந்து தொழில்களையும் ஒன்றாகக் காட்டுவதாகும். உடுக்கை ஏந்தியுள்ளது படைத்தலையும், அபயகரம் காத்தலையும், நெருப்பைக் கையில் கொண்டுள்ளது அழித்தலையும், முயலகன் மீது ஊன்றிய பாதம் மறைத்தலையும், எடுத்த பொற்பாதம் அருளலையும் குறிக்கும்.
சோழ நாட்டில் பத்தாம் நாள் தீர்த்தவாரி எனக் கொண்டாடப்படுகிறது. இறைவன் அருள்பெற்ற உயிரினங்கள் இறைவனின் அருட்பெருக்கில் அமிழ்வதைக் குறிக்கும். இம்முறைகள் சில கோவில்களில் மாறுபடுவதும் உண்டு. அந்தந்தத் தலத்தின் தல வரலாறுகளுக்கு ஏற்பப் பெருந்திருவிழா மாறுபாடு உடையாதிருக்கும்.

திருக்கோயில்களில் வீற்றிருந்து அருள் செய்யும் இறைவன், உற்சவமூர்த்திகளாக எழுந்தருளி அடியார்களுக்கு எளிவந்து அருள்செய்கிறான் என்பதே அடிப்படையாகும்.

‘இங்கு நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளி’, ‘பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் பழங் குடில்தொறும் எழுந்தருளிய பரனே’ என்ற மணிவாசகர் வாக்கை நிலைநாட்டுவதே திருவிழாக்களின் தத்துவம் ஆகும்.

No comments:

Post a Comment