-- ந. இரா. சென்னியப்பனார்
தொகையா நாவ லூராளி தொடுத்த திருத்தொண் டப்பெருமை
வகையால் விளங்க உயர்நம்பி யாண்டார் வகுப்ப மற்றதனைத்
தகையா அன்பின் விரித்துலகோர் தம்மை அடிமைத் திறப்பாட்டின்
உகையா நின்ற சேக்கிழான் ஒளிபொற் கமலத் தாள்பணிவாம்
-- கச்சியப்ப முனிவர்
ஓர் இனத்திற்கு மொழி எவ்வளவு முக்கியமானதோ அதைப் போன்றே வரலாறும். தமிழ்நாட்டு வரலாறும் இலக்கிய வரலாறும் தொன்மைக்காலம் முதல் இன்று வரை முறையானதாக அமையவில்லை என்னும் குறைபாடு உண்டு. இக்கூற்று முற்றிலும் பொய்யானது எனக் கூறமுடியாது.
தமிழர் தமது வரலாற்றை முழுமையாக எழுதி வைக்கவில்லை. புலவர்களும் வாய்ப்பு இருந்தும் வரலாற்று நிகழ்வுகள், பெயர்கள், அரசு புரிந்தவர், தமது வரலாறு இவற்றை முறையாக ஆவணப்படுத்தவில்லை.
சமய வரலாறு இவற்றிலிருந்து ஓரளவு மேல் எழுந்து விட்டது எனக் கருதலாம். சமயச் சான்றோர்களின் வாழ்க்கை தெளிவுபடுத்தப் பெற்றுள்ளது. காரணம் மக்கள் இவர்தம் வாழ்க்கையை நேசித்ததும், அவர் வழி நடக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டதுமே ஆகும். அவ்வகையில் திருத்தொண்டர்களாகிய நாயன்மார்களின் வரலாற்றுப் பதிவுகள் செம்மையாக அமைந்துள்ளன.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு வகையான தவநெறிகளையும் கைக்கொண்டு, பேரன்பின் பெருந்திறத்தால் ஞானசூரியர்களாக விளங்கிச் சிவபரம் பொருளைச் சிந்தையில் கொண்டவர்கள் நாயன்மார்கள்.
நாயன்மார் செய்த அருஞ்செயல்கள் மக்கள் உள்ளத்தில் நிலைத்தன. அவ்வரலாற்றை அவர்கள் காலங்காலமாகப் பேசி வந்தனர். கற்சிற்பங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் எனப் பலவற்றிலும் இவர்தம் பெருமை பேசப்படுகிறது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் போன்றோரும் அவர்கள் அறிந்திருந்த நாயன்மார்களைத் தமது பாடல்களில் மறவாமல் குறித்தனர்.
பின்னர் வந்த சுந்தரர் முழுமையாகவே திருத்தொண்டத்தொகையில் நாயன்மார் பெயர்களைக் குறித்தார். நம்பியாரூரர் வாழ்ந்த காலப்பகுதியாக கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலும் அதற்குமுன் பல்வேறு காலங்களிலும் தோன்றிச் சிவனடி மறவாச் சிந்தையராய் உலகம் உய்ய நற்பணிபுரிந்த திருவருட் செல்வர்களாகிய சிவனடியார்களின் திருப்பெயர்களை எடுத்தோதிப் போற்றும் வாயிலாகத் தமிழகம் உய்யப் பலவேறு திருப்பணிகளைப் புரிந்த அப் பெருந்தகையார்களின் வரலாறுகளைப் பின்னுள்ளோர் உணருவதற்குக் காரணமாக அமைந்தது இந்தத் திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகமே ஆகும்.
10 ஆம் நூற்றாண்டில் இராசராச மாமன்னன் காலத்தில் நம்பியாண்டார் நம்பி தமது திருத்தொண்டர் திருவந்தாதியில் நாயன்மார் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைச் சற்று விளக்கமாக அளித்தார்.
இவை அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்துக் கண்ட சேக்கிழார் பெருமான் இவற்றின் வழியும், கள ஆய்வின் வழியும் நாயன்மார் வரலாற்றை விரித்துக் கூறினார். “வருங்காலத்தில் என்ன நடக்கும் எனக்கூறத் தேவையான அறிவை விடப் பண்டு என்ன நடந்திருக்கும் என உன்னிக்கத் தேவையான அறிவு மிக நுட்பமானது” என்பார் அனதோல் பிரான்சு. இந்நுட்பமான அறிவு நம் சேக்கிழார் பெருமானிடம் மிக்கிருந்தது. ஆதலால் தான் தனக்கு முன்னே வாழ்ந்த அப்பெருமக்களின் வாழ்க்கை வரலாற்றைத் தெளிவாக நமக்கு அளிக்க முடிந்தது.
சேக்கிழார் அருளிய நாயன்மார்களின் வரலாற்றைச் சுருங்கச் சொல்லி மக்களிடம் கொண்டு செல்வதே மணிவாசகர் அருட்பணிமன்றத்தின் தலையாய பணியாகும்.
No comments:
Post a Comment