Showing posts with label கருவறை. Show all posts
Showing posts with label கருவறை. Show all posts

Thursday, 10 April 2014

திருக்கோயில் கருவறைக்குள் மகளிர் நுழையலாமா?



 —  ந. இரா. சென்னியப்பனார்


      “எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்
      உண்மை யாவது பூசனை எனவுரைத் தருள
      அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
      பெண்ணின் நல்ல வளாயின பெருந்தவர்க் கொழுந்து




என்று காமாட்சியம்மை வழிபட்டதைச் சேக்கிழார் பெருமான் பாடியுள்ளார்.

     மகளிர் கருவறைக்குள் சென்று வழிபட்டதைத் தலபுராணங்கள், திருமுறைகள், கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கும்பகோணத்துக்கு வடகிழக்கில் திருப்பனந்தாள் என்ற பாடல் பெற்ற தலம் உள்ளது. தாடகை என்ற பெண் திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் திருக்கோவிலில் நாள்தோறும் வழிபாடு செய்து வந்தாள்.

     ஒருநாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது கட்டிய ஆடை அவிழ்ந்து விழத் தொடங்கியது. நழுவிய ஆடையை இரு முழங்கைகளாலும் அழுத்திப் பற்றிக் கொண்டு இருகைகளாலும் பிடித்திருந்த மாலையைச் சிவலிங்கத்திற்குச் சூட்ட முயன்றாள். அப்போது இறைவன் மனமிரங்கித் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றுக் கொண்டார். அன்றுமுதல் அச்சிவலிங்கம் சாய்ந்தபடியே இருந்தது.

     சோழ மன்னன் செஞ்சடையப்பரை வழிபடச் சென்றபோது சிவலிங்கம் சாய்ந்திருப்பதைப் பார்த்தார். சிவலிங்கத்தை நேர் செய்ய முயன்றார். மன்னன் ஆணைப்படி யானை, சேனை முதலியவற்றின் துணையுடன் கயிறு கொண்டு இழுத்தும் சிவலிங்கம் நேராகவில்லை. குங்குலியக்கலயநாயனார் மன்னனின் இவ்வருத்தத்தைக் கேட்டுக் கோயிலுக்குச் சென்று தம் கழுத்தில் கயிற்றைக் கட்டிக் கொண்டு, கயிற்றின் மறுநுனியைச் சிவலிங்கத்தின் மேல் சுற்றி வலிந்து இழுத்தார். அவருடைய அன்புக்குக் கட்டுப்பட்ட இறைவன் நிமிர்ந்தார்.

     பெரியபுராணம், தலபுராணம் இரண்டிலும் இச்செய்திகள் உள்ளன. தாடகை என்ற பெண், கருவறைக்குள் சென்று வழிபட்டதை இதனால் அறியலாம். சோழ நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் திருச்சாத்தமங்கை என்பது திருநீலக்க நாயனாரால் சிறப்புப் பெற்றது. மயிலாடுதுறை திருவாரூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமருகல் என்ற தலத்திற்கு வடகிழக்கில் இது உள்ளது. இன்று சீயாத்தமங்கை என்று வழங்குகின்றது.

     திருநீலநக்க நாயனார் நாள் தோறும் திருச்சாத்த மங்கையில் உள்ள அயவந்தி என்ற கோவில் இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு திருவாதிரை நாளன்று மனைவியுடன் வழிபாடு செய்யக் கோவிலுக்குச் சென்றார். கருவறைக்குள் சென்று வழிபாடு செய்யத் தொடங்கினார். பக்கத்திலிருந்த மனைவியார் வழிபாட்டுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொடுத்தார்.

     வழிபாட்டு நிறைவில் இறைவன் முன் அமர்ந்து ஐந்தெழுத்தை விதிப்படி உச்சரிக்கத் தொடங்கினார். மெய்ம்மறந்து ஐந்தெழுத்தை ஓதினார். அப்போது சிலந்திப் பூச்சியொன்று சிவலிங்கத்தின் மீது விழுந்தது. இதனைக் கண்ட மனைவியார் உடனே பக்கத்தில் சென்று, பச்சிளம் குழந்தை மீது சிலந்தி விழுந்தால் தாய் வாயால் ஊதி உமிழ்ந்து வெப்பக் கொடுமையை நீக்குவதைப் போலச் சிவலிங்கத்தின் மீது விழுந்த சிலந்தியை வாயால் ஊதி உமிழ்ந்தாள்.

     வாயின் உமிழ் நீர் சிவலிங்கத்தின் மீது பட்டது. இதனைக் கண்ட திருநீலநக்கநாயனார் கண்களை மூடிக் கொண்டு மனைவியாரைப் பார்த்து, ‘அறிவற்றவளே! இச் செயலை ஏன் செய்தாய்? ’ என்று கேட்டார். சிவலிங்கத்தின் மீது வீழ்ந்த சிலந்தியை ஊதி உமிழ்ந்ததாக மனைவியார் கூறினார். ‘வேறு வகையில் போக்கியிருக்கலாம்; ஊதி உமிழ்ந்தது தவறு, அதனால் வழிபாடு தவறு உடையதாயிற்று என்று கூறி’ மனைவியைக் கோவிலிலேயே விட்டுச் சென்று விட்டார். அஞ்சிய மனைவியார் இரவு முழுவதும் கோவிலிலேயே தங்கி விட்டார்.

     இரவிலே திருநீலநக்கநாயனார், கனவில் இறைவன் தோன்றி ‘உம்முடைய மனைவியார் தாயன்போடு எம்மை ஊதி உமிழ்ந்த இடம் தவிரப் பிறவிடங்களிலெல்லாம் சிலந்தியால் உண்டான கொப்புளங்கள் தோன்றியுள்ளன. அவற்றைப் பார்’ எனக் காட்டினார். உடனே நாயனார் இறைவனைத் தொழுது வணங்கி விடிந்ததுதம் கோவிலுக்குச் சென்று கண்ணீர் சிந்தி அழுதார். பிறகு மனைவியாரை அழைத்துச் சென்றார்.

     இச்செய்திகளைப் பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் பக்திச் சுவை ததும்பப் பாடியுள்ளார். நாயனாருடன் மனைவியாரும் கோவில் வழிபாட்டில் பங்குபெற்றதையும் கருவறைக்குள் மகளிர் சென்று வழிபட்டதையும் இதன் மூலம் அறிய முடிகிறது.

     கொங்கு நாட்டில் வேடுபறியால் சிறப்புப் பெற்ற தலம் திருமுருகன்பூண்டி. சேரமான் பெருமாளிடம் சுந்தரமூர்த்தி நாயனார் பெற்று வந்த பொருள்களைச் சிவகணங்கள் திருடர் வடிவில் வந்து கவர்ந்து சென்றனர். சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடி இழந்த பொருள்களை மீட்டார்.

     திருமுருகன் பூண்டி கோவிலில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. முருகநாதர் கோவில் கருவறை வடக்குச் சுவரில் கொங்குப் பாண்டியன் வீரபாண்டியதேவன் (கி.பி. 1265–1285) காலக் கல்வெட்டு ஒன்று உள்ளது. அக்கல்வெட்டில் தேவரடியார்க்குக் கொடுத்த வரிசைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

     மாலைக் காலத்தில் பூசையின் போது அரங்கேறி நடனம் புரிதல், திருவிழாக் காலத்தில் ஊர்வலத்தின் இறுதியில் இறைவனுக்கு உண்டாகும் கண்ணேறு (திருஷ்டி) போக்கி ஆரத்தி எடுத்தல், பூசை முடிவில் திருநீறு, பிரசாதம் பெறும் உரிமை பெற்றிருத்தல், இறைவன் உற்சவத்தின் உலாவரும் போது உயர்ந்த ஆசனங்களிலிருந்து பார்த்தல், நடனம் ஆடிச் செல்லும் போது நடைக் காவனம் விரித்தல், மார்கழித் திருவாதிரையில் திருவெம்பாவைப் பாடலுக்கு அபிநயம் பிடித்தல் முதலிய வரிசைகள் தரப்பெற்றன.

     இவற்றிக்கெல்லாம் மேலாகக் கோயிலில் மூன்றாம் அறையாகிய மகாமண்டபம் கடந்து, அர்த்த மண்டபம் கடந்து கருவறை சென்று வழிபட உரிமை தரப்பட்ட செய்தி கல்வெட்டில் வருகின்றது.

     தேவரடியாராகிய நாட்டிய பெண்கள் கருவறை வரை சென்றனர் என்பதனால் கருவறைக்குள் சென்றனர் என்பது கல்வெட்டால் புலனாகிறது. கோகர்ணம், திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்) ஆகிய தென்னிந்தியக் கோவில்களிலும் சோமநாதம், கேதாரநாத், காசி, உஜ்ஜியினி, நாகநாதம், திரியம்பகம், பீமநாதம் முதலிய வட இந்தியக் கோவில்களிலும் ஆண், பெண் அனைவரும் கருவறைக்குள் சென்று வழிபடுவது இன்றும் நடைபெற்று வருகிறது.

     தமிழகத்தில் புலியூர் சிமெண்ட் ஆலைக்குப் பக்கத்தில் உள்ள உப்பிடமங்கலம் அடியார்க்கு எளியார் கோவிலும், தாடிக்கொம்பு திருவருள்துறை நாதர் கோவிலும் ஆண், பெண் அனைவரும் சென்று வழிபடலாம் என்ற மரபு நடைபெற்று வருகிறது.

     கோவை – கோவைப்புதூர், சிவக்குடிலில் உள்ள சிவன் கோவிலில் விரும்பியவர்கள் உள்ளே சென்று வழிபடலாம். கயிலைக்கு மூன்று முறை சென்று வந்த கயிலைக் குருமணி சித்தர் சுவாமிகள் வழிபாட்டில் உள்ள இக்கோவிலில், மகளிர்க்கு எல்லா உரிமையும் உண்டு.

     யானை, மாடு, சிலந்தி, காக்கை, அணில், நண்டு, ஈ, நாரை, கழுதை முதலிய அஃறிணைப் பொருள்கள் வழிபட்டுள்ளதைத் தல வரலாறுகள் பறைசாற்றுகின்றன.

     அம்மையின் அருளுக்குரியவர்கள், ஆண், பெண் இருபாலரின் தோற்றத்திற்குக் காரணமானவர்கள், பராசக்தியின் பரம்பரை ‘மகளிர்’ என்று பகவான் இராமகிருஷ்ணரால் பாரட்டப்பெற்றவர்கள் கருவறைக்குள் சென்று வழிபடுவதில் என்ன தவறு?

Wednesday, 7 November 2012

கருவறை இருட்டாக இருப்பது ஏன்?




— முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

தமிழகத்தில் தெய்வ வழிபாடு மிகத் தொன்மை வாய்ந்தது. வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டுத் தெய்வ வழிபாடு நடைப்பெற்றுள்ளது. தொல்காப்பியத்தில் கோயிலில் கந்தழி வழிபாடு செய்த சான்றுகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் கோயில் அமைப்பு, வழிபடும் முறை முதலியன ஆங்காங்கு உள்ளன.

பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் என்ற புலவர் பாடும்போது ‘முனிவர்கள் வணங்கும் மூன்று கண்களையுடைய சிவபெருமான் கோயிலை வலம் வரும்போது, உன்னுடைய கொற்றக்குடை பணிவதாக’ என்ற பொருளில்

“பணி இயர் அத்தை நின்குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே”
எனப் புறநானூற்றில் பாடியுள்ளார்.

எனவே, சங்க காலத்தில் கோயில் வலம் வரும் முறையும், நாடாளும் மன்னனாக இருந்தாலும் கோயிலுள் குடைபிடித்துச் செல்லக்கூடாது என்பதும் தெரிய வருகின்றன.

புகார் நகரில் - கற்பகத்தரு, ஐராவதம் பலராமன், சூரியன், சம்பாதி, வேல், மாசாத்தன், அருகன், சந்திரன் முதலியோர்க்குக் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தில் காண முடிகிறது.

பெருங்கோயில், கரக்கோயில், ஞாலக்கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் ஆகிய கோயில்களைத் திருநாவுக்கரசர் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். தொடக்க காலத்தில் மண், செங்கல், மரம் முதலியவற்றால் கோயில்கள் கட்டப்பெற்றன.

பல்லவர் காலம் முதல் கற்கோயில்கள் தோன்றின. கோயில் அமைப்பில் கோபுரம், பிரகாரங்கள், கொடிமரம், பலிபீடம், வாகனம், மண்டபங்கள், கருவறை முதலியன இடம்பெறுகின்றன. அனைத்தும் தத்துவ அடிப்படையில் அமைந்தவையாகும்.

கோயில் அமைப்பு மனித உடலோடு ஒத்தது. கோபுரம் மனிதனின் பாதம் போன்றது. மல்லாந்து படுத்திருக்கும் மனிதனின் பாதம் மேல் நோக்கியிருப்பது போல் நுழைவாயிலில் உள்ள கோபுரம் உயர்ந்து காணப்படுகிறது. கொடிமரம் மனிதனின் முதுகுத் தண்டு போன்றது. துவார பாலகர் மனிதனின் தோள்கள் போன்றவர். மகாமண்டபம், அர்த்த மண்டபம் உடம்பு போன்றவை. அந்தராளம் கழுத்து போன்றது. கருவறை தலை போன்றது.

‘என்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்’ என்பதற்கு ஏற்பக் கருவறை, கோயில் அமைப்பில் மிக முக்கியமானது.

கருவறைக்கு மூலஸ்தானம், உண்ணாழி எனப் பலபெயர்கள் வழங்கப் பெறுகின்றன. “கருவொடு பெயரிய காண்பின் நல்லில்” என்று சங்க இலக்கியமான நெடுநல்வாடை கருவறையைக் குறிப்பிடுகின்றது. கருவறையில் கோயிலுக்குரிய மூலமூர்த்தி அமைந்திருக்கும். இயற்கையாக அமைந்த கோயில் அல்லாமல் கட்டுகின்ற கோயில்களில் அளவுக்குத்தக்கபடி பக்கத்திற்கு எட்டு எட்டாக 64 சதுரங்கள் அல்லது ஒன்பது ஒன்பதாக 9 × 9 = 81 சதுரங்களில் கருவறை அமைக்கப்படும். சுற்றிலும் உள்ள சதுரங்களில் சுற்றுப்புற தெய்வங்கள், திருச்சுற்று இருக்க வேண்டும்.

சதுரங்கள் அமைப்பதற்குப் பதவின்யாசம் என்றும் சதுரங்களுக்கு மர்மத் தானங்கள் என்றும் வழங்கப்படும். கருவறை சதுரம், நீள்சதுரம், வட்டம், அறுகோணம், எண்கோணம் என்ற ஏதாவது ஓர் அமைப்பில் இருக்கும். கருவறையில் அமைந்திருக்கும்; ஏனைய உருவங்களுக்கேற்பப் பிற்பகுதியில் தள்ளி அமைக்கும் முறை உண்டு.

கருவறையில் பின்சுவர் முதல் மையம் வரையில் பத்துப் பாகம் செய்து நடுவில் 10-வது பாகத்தில் சிவலிங்கம் அமைக்கப்படும். 9-வது பாகத்தில் பிரம்மாவை வைக்க வேண்டும். 8-வது பாகத்தில் விஷ்ணுமூர்த்தி வைத்தல் வேண்டும். 7-வது பாகத்தில் சுப்பிரமணியர் வைத்தல் வேண்டும். 6-வது பாகத்தில் சங்கரி, சரஸ்வதி, இலக்குமி முதலிய உருவங்கள் அமைத்தல் வேண்டும். 5-வது பாகத்தில் ஏனைய பெண் தெய்வங்கள், 4-வது பாகத்தில் கணபதி, 3-வது பாகத்தில் பைரவர், 2-வது பாகத்தில் துர்க்கை, பிடாரி என்ற முறையில் உருவங்களை அமைத்தல் வேண்டும்.

வைணவக் கோயில்களில் கருவறையை மூன்று பாகம் செய்து, பின்சுவர் முதல் பாகத்தில் மூல மூர்த்தியையும், இரண்டாவது பாகத்தில் உற்சவமூர்த்தியையும் வைப்பது மரபாக உள்ளது. எல்லாக் கோவில்களிலும் கருவறை இருண்டேயிருக்கும்.

பண்டைய ஆலயங்களில் உள்ள கர்ப்பகிரகங்கள் மிகவும் இருண்டு தொழுவோர் மனதில் ஒரு வகை அச்சத்தையும், அதிசயத்தையும், வியப்பையும், திகைப்பையும் உண்டு பண்ணுமாறு அமைந்திருக்கும். அதற்குச் சூட்சுமான மறைபொருள் ஒன்று அறைக்குள் நிறைந்து மிதப்பாக வாக்குக் கெட்டாத உணர்ச்சியொன்று அடியார் மனத்துள் உண்டாகும். அஃது அவர்கள் பக்தியைப் பெருக்கும். அறிவின் சிறுமையை உணர்த்தும். தம்மை மறக்கச் செய்யும். உண்மை அன்பர்களைப் பரவசப்படுத்தும் என்று இலஞ்சி-சொக்கலிங்கம் அவர்கள் ஆலயங்களின் உட்பொருள் விளக்கம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

கர்ப்பக்கிருகம் என்பது பிரதான மூர்த்தியை வைத்து வணங்கும் இடமாகும். இதற்கு மூலஸ்தானம் என்றும் பெயர் உண்டு. இதன் உண்மை-எல்லாம் புத்தி தத்துவத்தில் ஒடுங்க. புத்திதத்துவமும் தனு, கரண, புவன, போகங்களும் மாயையில் ஒடுங்க, மாயை இறைவன் திருவடியில் ஒடுங்கும். இந்நிலை கேவலநிலை என வழங்கப்பெறும்.

அநாதி கேவல நிலையில் உயிர்களில் மீண்டும் பிறப்பதற்குப் பக்குவமானவையும் இருக்கும். கேவல நிலையில் உள்ள உயிர்கள் போதிய ஓய்வு எடுத்துக் கொண்டபின், மீண்டும் பிறந்து ஆன்ம யாத்திரையைத் தொடரும் நிலையில் உள்ளன. இவ்விரு வகை உயிர்களும் மீண்டும் பிறப்பதற்கு வர இறைவன் அருள்செய்ய வேண்டியுள்ளது.

பேரூழிக்கால இருளின் முடிவு நீங்கி மீண்டும் பிறக்கும்போது, பிறவியாகிய இருளின் தொடக்கம் உண்டாகின்றது. இப்பிறவி எடுத்து அறியாமையாகிய இருளில் துன்பப்படும் உயிர்களை இறைவன் திருவருள் சக்தியின் துணைகொண்டு ஈடேற்ற விரும்புகிறான்.

“இருட்டறை மூலை யிருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கி குணம்பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே”
என்று திருமூலர் பாடியுள்ளார். இருட்டறை - கருவறை, மூலையிருந்த குமரி - மறைந்திருந்த திருவருட்சக்தி, குருட்டுக் கிழவன் - அறியாமையில் மூழ்கியிருக்கும் ஆன்மா, கூடல் குறித்து - ஆன்மாவோடு சேர்ந்து அருள் புரிய எண்ணி, குருட்டினை நீக்கி - ஆன்மாவின் அறியாமையைப் போக்கி, குணம் பலகாட்டி - இறைவன் ஆன்மாக்கள் பொருட்டு இரங்கி வந்து அருள்புரியும் பெருமையை உணர்த்தி, மருட்டி அவனை மணம் புரிந்தாளே - திருவருளிடத்தில் அன்பு கொள்ளுமாறு மயக்கிச் சிவ மணம் கமழுமாறு செய்தாள் என்பது பொருள்.

அநாதி காலந்தொட்டு அறியாமையில் மூழ்கியிருக்கும் உயிர்களைத் திருவருட்சக்தியால் அறியாமையில் நீக்கிச் சிவப்பேற்றைத் தருவதற்காகவே கருவறையை நம் முன்னோர் இருட்டறை ஆக்கித் திருவருள்புரியும் திருவுருவங்களைக் கருவறையினுள் வைத்தனர்.

கருவறை இருட்டறையாக இருப்பதற்குக் காரணம் புரிகிறதா? புரியாமை என்ற அறியாமையின் அடையாளமே அந்த இருட்டு!