Friday, 14 December 2012

இறைவன் திருவருளே சிந்தித்த இன்றமிழ்த் தொண்டர்கள் வரலாறு


-- ந. இரா. சென்னியப்பனார்






தொகையா நாவ லூராளி தொடுத்த  திருத்தொண் டப்பெருமை
வகையால் விளங்க உயர்நம்பி யாண்டார் வகுப்ப மற்றதனைத்
தகையா அன்பின் விரித்துலகோர் தம்மை அடிமைத் திறப்பாட்டின்
உகையா நின்ற சேக்கிழான் ஒளிபொற் கமலத் தாள்பணிவாம்
-- கச்சியப்ப முனிவர்

ஓர் இனத்திற்கு மொழி எவ்வளவு முக்கியமானதோ அதைப் போன்றே வரலாறும். தமிழ்நாட்டு வரலாறும் இலக்கிய வரலாறும் தொன்மைக்காலம் முதல் இன்று வரை முறையானதாக அமையவில்லை என்னும் குறைபாடு உண்டு. இக்கூற்று முற்றிலும் பொய்யானது எனக் கூறமுடியாது.

தமிழர் தமது வரலாற்றை முழுமையாக எழுதி வைக்கவில்லை. புலவர்களும் வாய்ப்பு இருந்தும் வரலாற்று நிகழ்வுகள், பெயர்கள், அரசு புரிந்தவர், தமது வரலாறு இவற்றை முறையாக ஆவணப்படுத்தவில்லை.

சமய வரலாறு இவற்றிலிருந்து ஓரளவு மேல் எழுந்து விட்டது எனக் கருதலாம். சமயச் சான்றோர்களின் வாழ்க்கை தெளிவுபடுத்தப் பெற்றுள்ளது. காரணம் மக்கள் இவர்தம் வாழ்க்கையை நேசித்ததும், அவர் வழி நடக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டதுமே ஆகும். அவ்வகையில் திருத்தொண்டர்களாகிய நாயன்மார்களின் வரலாற்றுப் பதிவுகள் செம்மையாக அமைந்துள்ளன.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு வகையான தவநெறிகளையும் கைக்கொண்டு, பேரன்பின் பெருந்திறத்தால் ஞானசூரியர்களாக விளங்கிச் சிவபரம் பொருளைச் சிந்தையில் கொண்டவர்கள் நாயன்மார்கள்.

நாயன்மார் செய்த அருஞ்செயல்கள் மக்கள் உள்ளத்தில் நிலைத்தன. அவ்வரலாற்றை அவர்கள் காலங்காலமாகப் பேசி வந்தனர். கற்சிற்பங்கள்,  செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் எனப் பலவற்றிலும் இவர்தம் பெருமை பேசப்படுகிறது.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் போன்றோரும் அவர்கள் அறிந்திருந்த நாயன்மார்களைத் தமது பாடல்களில் மறவாமல் குறித்தனர்.



பின்னர் வந்த சுந்தரர் முழுமையாகவே திருத்தொண்டத்தொகையில் நாயன்மார் பெயர்களைக் குறித்தார். நம்பியாரூரர் வாழ்ந்த காலப்பகுதியாக கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலும் அதற்குமுன் பல்வேறு காலங்களிலும் தோன்றிச் சிவனடி மறவாச் சிந்தையராய் உலகம் உய்ய நற்பணிபுரிந்த திருவருட் செல்வர்களாகிய சிவனடியார்களின் திருப்பெயர்களை எடுத்தோதிப் போற்றும் வாயிலாகத் தமிழகம் உய்யப் பலவேறு திருப்பணிகளைப் புரிந்த அப் பெருந்தகையார்களின் வரலாறுகளைப் பின்னுள்ளோர் உணருவதற்குக் காரணமாக அமைந்தது இந்தத் திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகமே ஆகும்.

10 ஆம் நூற்றாண்டில் இராசராச மாமன்னன் காலத்தில் நம்பியாண்டார் நம்பி தமது திருத்தொண்டர் திருவந்தாதியில் நாயன்மார் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைச் சற்று விளக்கமாக அளித்தார்.



இவை அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்துக் கண்ட சேக்கிழார் பெருமான் இவற்றின் வழியும், கள ஆய்வின் வழியும் நாயன்மார் வரலாற்றை விரித்துக் கூறினார். “வருங்காலத்தில் என்ன நடக்கும் எனக்கூறத் தேவையான அறிவை விடப் பண்டு என்ன நடந்திருக்கும் என உன்னிக்கத் தேவையான அறிவு மிக நுட்பமானது” என்பார் அனதோல் பிரான்சு. இந்நுட்பமான அறிவு நம் சேக்கிழார் பெருமானிடம் மிக்கிருந்தது. ஆதலால் தான் தனக்கு முன்னே வாழ்ந்த  அப்பெருமக்களின் வாழ்க்கை வரலாற்றைத் தெளிவாக நமக்கு அளிக்க முடிந்தது.

சேக்கிழார் அருளிய நாயன்மார்களின் வரலாற்றைச் சுருங்கச் சொல்லி மக்களிடம் கொண்டு செல்வதே மணிவாசகர் அருட்பணிமன்றத்தின் தலையாய பணியாகும்.

தில்லை வாழ் அந்தணர்




கோயில் எனச் சைவ உலகில் போற்றப் பெறுவது தில்லைப் பெருங்கோயில். அத்திருக்கோயிலில் உள்ள சிற்றம்பலத்தில் கற்பனைக்கு எட்டாத சோதிப் பிழம்பான இறைவன் இரக்கமே வடிவாக இருந்து திருநடம்புரிகிறார். அங்கு இறைவனுக்குத் தொண்டு செய்வோர் தில்லை வாழ் அந்தணர்கள்.

இவர்கள் முத்தீவேள்வி செய்பவர்கள். அறத்தைத் துணையாகக் கொண்டு, மெய்யியல் கொள்கைகளைப் பின்பற்றுபவர். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்மறைகளையும் பயின்றவர். குற்றமற்ற ஒழுக்கம் உடையவர். திருநீற்றினை உயர்ந்த செல்வம் எனக் கொள்பவர்கள். சரியை, கிரியை, யோகம், ஞானம் முதலிய நான்கினையும் அறிந்தவர்கள்.

தானம் கொடுக்கும் தகைமை உடையவர்கள். தவம்புரியும் தன்மை மிக்கவர்கள். உலக மக்கள் புகழும் படியான மானமும் பொறுமையும் பெற்றவர்கள். திருத்தொண்டர்த் தொகை தென் தமிழின் பயனாய் உள்ளது. அதில் தில்லை வாழ் அந்தணர்களைச் சுந்தரர் முதலில் வைத்துப் பாடினார்.

தில்லை வாழ் அந்தணர்களை ஊறு இன் தமிழால் உயர்ந்தார் எனத் திருஞானசம்பந்தர் குறித்துள்ளார். இக்கோயில் மகுடாகமப்படி பூசை நடைபெறுவது எனத் தில்லைக் கலம்பகத்தில் பதிவு செய்துள்ளனர் இரட்டைப் புலவர்கள்.

Thursday, 6 December 2012

குருப்பெயர்ச்சியில் குழப்பம்

—  ந. இரா. சென்னியப்பனார்


“ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழுது
ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை”
என்பது திருஞானசம்பந்தர் தேவாரம் ஆகும்.

இறைவன் குணம் குறி இல்லாதவன்; உயிர்கள் உய்ய வேண்டும் என்பதற்காகப் பல்வேறு வடிவங்களைக் கொள்கின்றான்.

‘உயிர் வர்க்கங்கள் பொருள் இயல்பு உணர்ந்து வீடுபெறும் பொருட்டுத் திருமேனி ஒரு தலையான் வேண்டப்படும்’ என்பர் சிவஞானமுனிவர். உயிர்களின் பக்குவங்களுக்கேற்பத் திருவுருவங்கள் பலவகைப்படும். சைவத்தில் திருவுருவங்கள் இருபத்தைந்து என்பது மரபு. அவற்றுள் ஆலமர்செல்வன் உருவமும் ஒன்று. தென்முகக்கடவுள், தட்சிணாமூர்த்தி என்று வழங்கப்படும்.

 

புராண வரலாறு

 

உமாதேவி இமயமலையில் மலையரசன் மகளாகத் தோன்றி தவம் செய்தாள். சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்ஆகிய முனிவர் நால்வரும் கடுந்தவம் செய்து ஞானநிலை அடைய முடியாமையால், திருக்கயிலை சென்று சிவபெருமானைத் தரிசித்து ஞானநிலையடைய உபதேசித்து அருளுமாறு வேண்டினார். சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ்த் தென்முகக் கடவுளாக வீற்றிருந்து அந்நால்வருக்கும் சின்முத்திரை காட்டி உபதேசித்தருளினார்.

இலக்கியங்களில் ஆலமர் செல்வன்


சங்க இலக்கியங்களிலும், காப்பியங்களிலும் ஆல்கெழு கடவுள், ஆலமர் செல்வன் என்று வழங்குவதைக் காணலாம்.
“அறங்கொண்ட சிவதன்மம் உரைத்த பிரான்”
என்றும்
“அணிபெற வடமர நிழலின் அமர்வொடும் அடியிணையிருவர்கள்
பணிதர அறநெறி மறையொடும் அருளியபரன்”
 என்றும் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

“மடற்பெரிய ஆலிங்கீழ் நால்வர்க்கு அறம் அன்றுரைத்தான்”
“பணைத்தெழுந்த ஆலின் கீழ் இருந்து ஆரணம் ஓதி”

என்றும் திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.
“நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழ்இருந்து அறம் உரைத்தான்”
என்பது மணிவாசகர் வாக்கு. இன்னும் திருமுறைகளில் பலவிடங்களில் பலவாறாகக் காணப்படுகின்றன.

நால்வர்க்கு உணர்த்தியவை வேதங்களா? நாற்பொருளா?


திருமுறைகளில் சிலவிடங்களில் நால்வருக்கு வேதங்களை உணர்த்தியதாகவும், சிலவிடங்களில் அறமுதலிய நாற்பொருளை உணர்த்தியதாகவும் வருவது உண்டு.
“விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்”
“அழிந்த சிந்தை அந்தணர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு மொழிந்தவாயான்”
என்பன தேவாரப் பாடல் தொடர்கள்.

நான்கு வேதங்களில் உட்பொருள் அறம், பொருள், வீடு, இன்பம், என்பன. எனவே இரண்டிற்கும் வேறுபாடு இல்லை. அதனால் மணிவாசகப் பெருமான்,
 “நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை,
 அன்றாலின் கீழ் இருந்து அறம் உரைத்தான்”
என்றார்.

திருமுறைகளில் ஆலமர் செல்வன் வேதங்களை உரைத்தான் என்று வரும் இடங்களில் வேதங்களின் உட்பொருளாகிய அறம் முதலிய நாற்பொருளை உரைத்தான் எனக் கொள்ள வேண்டும். அறம் உரைத்தான் என்று வரும் இடங்களில் அறம் முதலிய நாற்பொருள் எனக் கொள்ள வேண்டும். அவற்றின் வாயிலாக உணர்த்தியது ஞானமே ஆகும்.

 

உணர்த்தியது நால்வர்க்கா? மூவருக்கா? இருவருக்கா? ஒருவருக்கா?


திருமுறைகளில் பெரும்பாலான இடங்களில் நால்வர்க்கு உணர்த்தியதாகவே சுட்டப்படும். நால்வர்-முற்கூறிய சனகர் முதலிய நால்வர் ஆவர்.

‘மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்’ என்பது திருமந்திரம். சிவயோக மாமுனி, மன்றுதொழுபதஞ்சலி, வியாக்கிரபாதர் -ஆகியோர் மூவர் என்பது திருமூலர் கொள்கை.

‘அடியிணை இருவர்கள் பணிதர’ என்று முற்கூறிய திருஞானசம்பந்தர் பாடலில் இருவர் சுட்டப்பட்டுள்ளார். இருவர் - நாரதர்,அகத்தியர் என்பதைப் பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடல் புராணத்தில் காணலாம்.
“ஆல்வருக்கும் தனிலுயர்ந்த வடநிழற்கே தென்முகங்கொண்டு அறவோர் ஆய
 நால்வருக்கும் இருவருக்கும் ஒருவருக்கும் நவின்றருளி நவிலொணாத
நூல்வருக்கும் ஒருவருக்கும் நுவலாமல் நுவன்றான்”
என்பது திருக்குற்றாலரைப் போற்றும் புராணப் பாடற் பகுதியாகும்.

ஒருவருக்கு உணர்த்தியது:
“கல்லால் நிழல் மலைவு, இல்லார் அருளிய,
 பொல்லார் இணைமலர் நல்லார் புனைவரே”
என்று சிவஞானபோத மங்கலவாழ்த்தில் குறிக்கப் பெறும் நந்தியெம்பெருமானுக்கு உண்ர்த்தியது ஆகும்.

ஆலமர் செல்வனாக,தென்முகக் கடவுளாக இருந்து இறைவன் உணர்த்தியது ஞானநிலையாகும். வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு தன்மையர்க்கும் உணர்த்தியது ஆகும். சனகாதி நால்வர்க்கும்உணர்த்தியது ஒரு காலம்.

சிவயோகமுனிவர் முதலிய மூவருக்கும் தனித்தனியே வெவ்வேறு காலத்தில் உணர்த்தியது ஆகும். அவ்வாறே நாரதமுனிவர்க்கும்,அகத்தியர்க்கும் உணர்த்தியது வெவ்வேறு காலமாகும். சந்தானக் குரவரில் முதற் குருவான நந்தியெம்பெருமானுக்கு உணர்த்தியது வேறு காலம் ஆகும். உணர்த்தியது சிவஞானமாகும்.

 

திருவுருவ அமைப்பு


எல்லாச் சிவன் கோவில்களிலும் கருவறையின் தென்புறக் கோட்டத்தில் தென்முகக் கடவுள் அமர்ந்த கோலத்தில் வீற்றிருப்பார். வலக்காலைத் தொங்க விட்டு இடக்காலை வீராசனமாக மடித்து வைத்திருப்பார். நான்கு கைகள் இருக்கும். மேல் வலக்கையில் நாகம் இருக்கும். மேல் இடக்கையில் திரிசூலம் அல்லது உடக்கையிருக்கும். கீழ் வலக்கை சின் முத்திரையாகப் பெருவிரல் அடியில் சுட்டுவிரலை மடக்கிச் சேர்த்து ஏனைய மூன்று விரல்களை விரித்துக் காட்டி வலப்புற மார்புக்கு நேராக இருக்கும். கீழ் இடக்கையில் ஏடு அல்லது செபமாலை இருக்கும். தலையில் சந்திரன், கங்கை, ஊமத்தம்பூ முதலியன இருக்கும். மேல் கல்லால மரக்கிளைகள் இருக்கும். கீழே பக்கத்துக்கு இருவராக நான்கு முனிவர் அமர்ந்திருப்பர். சிவன் கோவில் விமானம், கோபுரம் ஆகியவற்றில் தென்புரத்தில் சுதை வேலைப்பாட்டில் பல்வேறு நிலையில் ஆலமர் செல்வன் உருவங்கள் அமைந்து காணப்படும். யோகதட்சிணாமூர்த்தி, வீணாதட்சிணாமூர்த்தி முதலிய உருவ வேறுபாடுகள் உண்டு.

 

தத்துவம்

 

      “மும்மலம் வேறுபட்டொழிய மொய்த்துயிர்
      அம்மலர்த்தாள்நிழல் அடங்கும் உண்மையைக்
      கைம்மலர்க்காட்சியில் கதுவநல்கிய
      செம்மலையலது உளம் சிந்தியாதரோ”
என ஆலமர் செல்வனின் உண்மைத் தத்துவத்தைக் கச்சியப்பமுனிவர் பாடியுள்ளார்.

கும்பகோணத்திற்கு அண்மையில் உள்ள திருவிரும்பூளை (ஆலங்குடி) சிறந்த வழிபாட்டுத்தலமாகும். கொங்கு நாட்டில் அன்னூர்க் கோவில்பாளையம் காலகாலேசுவரர் திருக்கோவில் ஆலமர்செல்வன் சிறப்புடையவர்.

கோவை மாவட்டம் போளுவாம்பட்டிக்கு மேற்கில் உள்ள முட்டத்து நாகேசுவரர் திருக்கோவில் - ஆலமர் செல்வன் காலை - பசு நாவால் தடவுவது போல் உள்ளது தனிச் சிறப்பாகும்.

 

தவறான வழிபாடு


அண்மையில் குருப்பெயர்ச்சி என்று வந்தது. அன்று எல்லாச் சிவன் கோவில்களிலும் தட்சிணாமூர்த்திக்குச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆலங்குடியில் இலட்சார்ச்சனை - சிறப்பாக - ஆலங்குடி -தட்சிணாமூர்த்திக்குச் செய்தனர்.

குரு எனப்படுவார் நவக்கிரகங்களில் ஒருவர் ஆகிய வியாழன் ஆகும். நவக்கிரகங்களில் நடுவில் உள்ள சூரியனுக்கு நேர்வடக்கில் வடக்குப் பார்த்துக் குருவின் உருவம் அமந்திருக்கும். அந்தக் குருவே பெயர்ச்சிக்குரியவர்.

சூரியனை மையமாகக் கொண்ட கோள்களில் வியாழனாகிய குரு ஒராண்டுக்கொரு ராசியாக, ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகளுக்கொரு முறை உரிய இடம் வருவர்.

குருப்பெயர்ச்சியின் போது நவக்கிரகங்களில் உள்ள குருவுக்கே வழிபாடு செய்திருக்க வேண்டும். தட்சிணாமூர்த்தி ஞானகுரு ஆவார். அவர் என்றும் பெயரார். சிவபெருமானின் அம்சம் தட்சிணாமூர்த்தி ஆவார்.

வாரந்தோறும் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் துணியணிந்து, கடலை மாலை சாத்தி வழிபட்டு வருகின்றனர். இதுவும் தவறு.

நவக்கிரங்களில் உள்ள குருவுக்குக் கடலை மஞ்சள் நிறத்துணி முதலியன உரியன. அவற்றைத் தட்சிணாமூர்த்திக்கு அணியக்கூடாது. நவக்கிரங்களில் உள்ள குரு வேறு, தட்சிணாமூர்த்தியாகிய ஞானகுரு வேறு.

நவக்கிரகக் குருவை வழிபட்டால் சிறிதளவே பயன் உண்டாகும். ஞானகுருவாகிய தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பயனும் கிடைக்கும்.

Wednesday, 28 November 2012

திருக்கோயில் திருவிழாக்கள்

—  ந. இரா. சென்னியப்பனார்

தமிழகத்தில் திருக்கோயில்கள் மிக்குள்ளன. கோயில்களில் நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்று வருகின்றன. ‘எடுக்கும் விழவும் நன்னாள் விழவும்’ என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். திருக்குறளில், ‘சிறப்பொடு பூசனை’ எனக் குறிப்பிடப்படுகின்றது. பூசனை, நன்னாள் விழவு என்பன நாள்தோறும் நடைபெறுவன.

வடமொழியில் நித்தியபூசை எனப்படும், சிறப்பு எடுக்கும் விழவு என்பன விழாக்கால வழிபாடுகள் ஆகும். இது வடமொழியில் நைமித்திகம் எனப்படும். சிறப்பு வழிபாடு - ஆண்டுத் தொடக்கமான சித்திரை முதல் நாள், ஆடிப் பதினெட்டு, மார்கழித் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம், முதலியனவாகும்.

விழாக்கால வழிபாட்டில் தலங்களுக்கு ஏற்பப் பெருந்திரு (மகோத்சவம்) விழா நடைபெற்று வருகின்றது. திருக்கோயில் அமைந்த இடத்திற்கேற்ப, அங்குள்ள மக்கள் வாழ்க்கைக்கு ஏற்ப, காலத்திற்கேற்பத் திருவிழாக்கள் அமையும். முருகப் பெருமான் கோயில்கள் பெரும்பாலும் தைப்பூசத்தையொட்டி திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

அவிநாசி முதலிய தலங்களில் சித்திரையிலும், திருவண்ணாமலையில் கார்த்திகையிலும், பேரூர், மயிலாப்பூர் முதலிய இடங்களில் பங்குனியிலும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான கோயில்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

திருவிழாத் தொடங்குவதற்கு முந்திய நாள் மண்ணெடுத்தல், முலையிடுதல் நடைபெறும். எடுத்த சுத்த மண்ணைப் பதஞ்செய்து அதில் விதைகளை இட்டு முளைக்கச் செய்வர். இது இறைவன் செய்யும் ஐந்தொழிலில் படைத்தல் தொழிலைக் குறிக்கும்.

முதல் நாள் கொடியேற்றம் நடைபெறும். இறைவன் கோயிலில் எருதுக் (ரிஷபக்) கொடி, முருகன் கோயிலில் சேவற்கொடி அல்லது மயில் கொடி, திருமால் கோயிலில் கருடக் கொடி, அம்மன் கோயிலில் சிங்கக் கொடியும் ஏற்றப் படுகின்றன. துணியில் உருவம் எழுதப் பெற்று வழிபாட்டில் வைத்துப் பூசித்துக் கயிற்றில் கட்டிக் கொடிமரத்தின் உச்சியில் ஏற்றுவர். திருவிழாவுக்கு வரும் அடியார்களைத் திருவருள் உயர்த்தி நற்கதிக்குச் செலுத்தும் என்பதே இதன் அடிப்படை உண்மையாகும்.

இரண்டாம் நாள் — சூரியப் பிரபை, சந்திரப் பிரபை ஆகியவற்றில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி உலா வருவர். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கு வாழ்வத்ற்குச் சூரிய வெப்பம் மிகவும் தேவை. சூரிய வெப்பம் நீர் நிலைகளில் உள்ள நீரை நீராவியாக்கி மேகமாக மாற்றுகிறது; மேகம் மழை பெய்கிறது. சந்திரன் இன்பத்தைத் தருகிறான். சூரிய சந்திர பிரபைகளில் உலா வருவது காத்தல் தொழிலை குறிக்கும்.

மூன்றாம் நாள் — பூத வாகனம், சிம்ம வாகனங்களில் உலா வருவது உண்டு. பூதம் இறைவன் சொரூபம் பெற்றது. சிம்மம் ஆற்றல் பெற்றது. பூத கணங்கள் இறந்த ஆன்மாக்களைக் கொண்டு செல்லும், சிங்கம் பிற விலங்கினங்களைக் கொன்று தின்னும், இரண்டும் அழித்தல் தொழிலுக்குரியன. எனவே பூத வாகனம், சிம்ம வாகனம் ஆகியவற்றில் உலா வருதல் அழித்தல் தொழிலைக் குறிக்கும்.

நான்காம் நாள் — காமதேனு, நாகப்பாம்பு, மலர்ப்பல்லக்கு ஆகியவற்றில் தலத்திற்கேற்ப ஒன்றிலோ, இரண்டிலோ உலா வருவது உண்டு. காமதேனு பாலை மடியில் மறைத்துள்ளது. பாம்பு, புற்றில் மறைந்திருந்து வேண்டும் போது வெளிவருவது நஞ்சு, மாணிக்கம், படம் ஆகியவற்றை மறைத்துக் கொண்டு வேண்டும் போது வெளிப்படுத்தும். மலரில் மணம் மறைந்திருந்து உரிய காலத்தில் வெளிப்படும். இறைவன் மறைந்திருந்தே அருள் செய்வான், எனவே இது மறைத்தலைக் (திரோபவம்) குறிக்கும்.

ஐந்தாம் நாள் — ஏறு ஊர்ந்தான் (ரிஷபவாகன) இன்பக் காட்சியாகும். இறைவன் அடியார்களுக்கு எருது வாகனத்தில் தோன்றியே காட்சி கொடுத்துள்ளான், எருது மாசு அற்றது, வெண்மையானது, மலம் நீங்கி அருளுடன் கூடிய ஞானத்தைக் காட்டி நிற்கின்றது.

எனவே, ஐந்தாம் நாள் அருளலைக் (அநுக்கிரகம்) குறிக்கும். ஆதலால் திருவிழாவில் ஐந்தாம் நாள் பக்தர்களுக்கு மிகச் சிறப்பு வாய்ந்தது. அன்று நாயன்மார்களும் உலா வருவர். அவிநாசி, மயிலாப்பூர் முதலிய தலங்களில் ஐந்தாம் நாள் விழாவை ‘அறுபத்து மூவர் காட்சி’ என்றே அழைப்பதை இன்றும் காணாலாம்.

ஆறாம் நாள் — வெள்ளை யானையில் உலா வருவதும் உண்டு. யானை ஒரே பிண்டமான பருத்த உடல், கால்கள் முதலியவற்றை உடையது. விலங்கினங்களில் மிகப் பெரியது, ஆற்றல் மிக்கது, பாகர் தன் காலில் அடிவைத்தால் மேலே ஏற உதவுவது, கட்ட விரும்பினால் தானே சங்கிலி எடுத்து தருவது - இத்தகைய யானை மேல் இறைவன் உலா வருவது ‘பக்தி வலையில் படுவோன் காண்க’ (திருவாசகம்) என்பத்கேற்ப அடியார் பக்திக்கு இரங்கி அருள் செய்வான் என்பதைக் குறிக்கும்.

ஏழாம் நாள் — தேர்த் திருவிழாவாகும். பண்டைக்காலத்தில் அரசர்களுக்குத் தேரே சிறந்த வாகனம் ஆகும். தேர்களில் மிகச் சிறந்த உயர்ந்த தேரைத் கடவுளர் வீதி வலத்திற்குப் பயன்படுத்தினர். இறைவன் பூமியாகிய தேரில் ஏறித் துன்பம் செய்த திரிபுரத்தவர்களை அழித்து மற்றவர்களைக் காத்தான். தீமை அழித்து அடியார்களைக் காப்பது தேர்த் திருவிழாவாகும். தேர் அமைப்பு முழுவதற்கும் தத்துவப் பொருள் கூறுவது உண்டு.

எட்டாம் நாள் — இறைவன் குதிரை வாகனத்திலும், இறைவி அன்னம் அல்லது கிளி வாகனத்திலும் உலா வருவர். குதிரைக்கு வாசி என்று பெயர். வாசியோகத்தைச் சுட்டும். யோகியர்க்கு எளிதில் அருள் செய்வான் என்பதனைக் குறிக்கும். அன்னம் நீரை விட்டுப் பாலை பருகும். அம்மை குற்றம் நீக்கிக் குணம் பாராட்டுவாள். கிளி சொன்னதைச் சொல்லும். அம்மை உயிரினங்களுக்குத் திருவருள் வீழ்ச்சியைத் (சத்தி நிபாதம்) தருவாள். எட்டாம் நாள் கொங்கு நாட்டுக் கோயில்களில் வேடுபறி அல்லது பரிவேட்டை என்று கொண்டாடப் பெறும். திருமுருகன் பூண்டியில் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் வேடுபறி செய்ததை அடிப்படையாகக் கொண்டே இவ்விழா நடைபெறுகிறது. வாழ்க்கையில் பக்தியினால் இழந்ததை மீண்டும் பெறலாம் என்பதையே இவ்விழா குறிக்கின்றது.

ஒன்பதாம் நாள் — தெப்பத்தேர்த் திருவிழாவாகும். தெப்பக் குளத்தில் நீர் நிறைத்து மிதவை அமைத்து, அதன்மேல் மலர்ப் பல்லக்கில் இறைவன், இறைவிகளை எழுந்தருளச் செய்து தெப்பக்குளத்தின் உள்ளேயே சுற்றிவருவது உண்டு. பெரிய கோவில் உள்ள ஊர்களில் தெப்பக்குளம் அமைந்திருப்பதை இன்றும் காணலாம். நீரில் மிதந்து வருவது போல் இறைவன் அடியார்களின் அன்பு வெள்ளத்தில் மிதந்து அருள்செய்வான் என்பதைக் காட்டும்.

பத்தாம் நாள் விழாக் கொங்கு நாட்டில் தரிசனம் என வழங்கப் பெறுகின்றது. சிவன் கோயிலாக இருந்தாலும் முருகப் பெருமான் கோவிலாக இருந்தாலும் பத்தாம் நாள் நடராசர் தரிசனமாகும். அதிகாலையில் நடராசப் பெருமானுக்கும் சிவகாமி அம்மைக்கும் திருமஞ்சனம் செய்து வீதியில் உலாவரச் செய்வர். வெளியில் வந்ததும் பட்டிசுற்றல் நடைபெறும். இதுவும் கொங்கு நாட்டிற்கே உரியது. ஆடு, மாடு அடைக்கும் இடம் பட்டியாகும். கால்நடைகளுக்கு இரங்கி அருள் செய்கிறான் என்பதைக் குறிக்கும்.

திருவிழாக்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களை அடிப்படையாகவே கொண்டு அமைந்திருக்கும். நடராசர் தரிசனம் ஐந்து தொழில்களையும் ஒன்றாகக் காட்டுவதாகும். உடுக்கை ஏந்தியுள்ளது படைத்தலையும், அபயகரம் காத்தலையும், நெருப்பைக் கையில் கொண்டுள்ளது அழித்தலையும், முயலகன் மீது ஊன்றிய பாதம் மறைத்தலையும், எடுத்த பொற்பாதம் அருளலையும் குறிக்கும்.
சோழ நாட்டில் பத்தாம் நாள் தீர்த்தவாரி எனக் கொண்டாடப்படுகிறது. இறைவன் அருள்பெற்ற உயிரினங்கள் இறைவனின் அருட்பெருக்கில் அமிழ்வதைக் குறிக்கும். இம்முறைகள் சில கோவில்களில் மாறுபடுவதும் உண்டு. அந்தந்தத் தலத்தின் தல வரலாறுகளுக்கு ஏற்பப் பெருந்திருவிழா மாறுபாடு உடையாதிருக்கும்.

திருக்கோயில்களில் வீற்றிருந்து அருள் செய்யும் இறைவன், உற்சவமூர்த்திகளாக எழுந்தருளி அடியார்களுக்கு எளிவந்து அருள்செய்கிறான் என்பதே அடிப்படையாகும்.

‘இங்கு நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளி’, ‘பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் பழங் குடில்தொறும் எழுந்தருளிய பரனே’ என்ற மணிவாசகர் வாக்கை நிலைநாட்டுவதே திருவிழாக்களின் தத்துவம் ஆகும்.

Tuesday, 20 November 2012

கோவிலுக்கு ஒரு தலமரம் ஏன் வந்தது?




—  ந. இரா. சென்னியப்பனார்



உலக உயிரினங்களில் மிகப் பழங்காலத்தில் தோன்றியவை மரங்களாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே மரங்கள் இருந்துள்ளன. மக்களுக்குப் பலவிதங்களில் பயன்பட்டுள்ளன. மரங்களில் தெய்வங்கள் உள்ளன என்று கருதி வழிபாடு செய்துள்ளனர்.

சிந்துவெளி நாகரிகத்தில் மரவழிபாடு இடம் பெற்றுள்ளது. சிந்துவெளி முத்திரைகளில் அரசமரங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன. தாய்த் தெய்வ வழிபாடு தொன்மையானதைப் போலவே மரவழிபாடும் தொன்மையானது ஆகும்.

மெசபொடாமியாவில் மரக்கிளைகள் தெய்வப் பண்புடன் முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்து சமயத்தினரால் வழிபாட்டுக்குரியதாக ஏற்றுக் கொள்ளப்படும் மரங்களில் ஒன்றான அரசமரம் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுவதால் ஐந்தாயிரம் ஆண்டுகளாக மக்கள் மனதில் வழிபாட்டுச் சின்னமாக மரம் இடம் பெற்றுள்ளது என்று ஆய்வாளர் கோசாம்பி குறிப்பிட்டுள்ளார்.

சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட ஆடைகளின்றிப் பெண் தெய்வம் ஒன்று காணப்படுகிறது. நீண்ட கூந்தலும் கைகளில் காப்புகளும் காணப்படுகின்றன. மக்கள் உருவங்களும் விலங்கு உருவங்களும் அந்த அன்னை தெய்வத்திற்குப் பணிந்து அஞ்சலி செய்து நிற்கின்றன. அரசமரமும் அதனுடன் சேர்ந்த அன்னை வழிபாடும் ஆரியர் காலத்துக்கு முற்பட்டன என்பதற்கு இதனையும் சான்றாகக் கொள்வர் வரலாற்று ஆசிரியர் என்று கலாநிதி கைலாசபதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் இன்று கிடைக்கும் நூல்களில் தொல்காப்பியமே மிகப் பழமையானதாகும். தொல்காப்பியத்தில் மரங்களைப் பற்றிய செய்திகள் மிகுதியாக உள்ளன. மாமரம், புளியமரம், ஒடுமரம், சேமரம், விசைமரம், பனை, இல்லம், ஆல், வேல் முதலிய மரங்களுக்கு எழுத்து அதிகாரத்தில் புணர்ச்சி விதி கூறியுள்ளார் தொல்காப்பியர்.

     “தெய்வம், உணாவே, மா மரம், புள், பறை
      செய்தி, யாழின் பகுதியொடு தொகை-இ
      அவ்வகைபிறவும் கருவெனமொழிப”

என்று கருப்பொருள் பற்றிக் கூறும் போது ஒவ்வொரு திணைக்கும் மரம் உண்டு என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

குறிஞ்சி மரத்தாலும் குறிஞ்சிப் பூவாலும் குறிஞ்சித் திணை என்றும், முல்லைச் செடியாலும் முல்லைப் பூவாலும் முல்லைத்திணை என்றும், மருத மரத்தாலும், மருதப் பூவாலும் மருதத்திணை என்றும், நெய்தல் செடியாலும் நெய்தல் பூவாலும் நெய்தல் திணை என்றும், பாலை மரத்தாலும் பாலைப் பூவாலும் பாலைத்திணை என்றும் தாவரங்களால் ஐந்திணைகள் பெயர் பெற்றன.

பழங்குடி மக்களிடையே மரபுச்சின்னங்கள் இருந்துள்ளன. பெரும்பாலும் மரங்களே குல மரபுச் சின்னங்களாக அமைந்துள்ளன. தமிழ் நாட்டு மூவேந்தரில் சேரர்க்குப் பனையும், சோழருக்கு ஆத்தியும், பாண்டியர்க்கு வேம்பும் அவ்வாறு குலமரபுச் சின்னங்களாக அமைந்தவையே ஆகும்.

சங்க இலக்கியங்களில் பனை மரம், காவல் மரம் முதலியன குறிக்கப் பெறுகின்றன. ஊர்ப்பொதுவில் மக்கள், மரத்தின் நிழலில் அமைந்த மேடையிலேயே கூடி ஊர்க்காரியங்களை ஆய்ந்தனர். மரங்களில் தெய்வம் இருப்பதாக நம்பினர். பொதுவிடமான மன்றத்தில் உள்ள கடம்பு மரத்தில் அச்சத்தைச் செய்யும் வல்லமையில் முதிர்ச்சிமிக்க தெய்வம் கொடியவர்களை வருத்தும் என்று அறிந்தோர் கூறுவர் என்பதனை

     “மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
      கொடியோர்த் தெறூஉம் என்ப”

என்ற குறுந்தொகைப் பாடற்பகுதி குறிப்பிடுகின்றது. மன்ற பொதுவிடம், மரா - கடம்பு மரம், மராஅத்த - கடம்பு மரத்தில் உள்ள, பே - அச்சம், தெறூஉம் - வருத்தும்.

‘நல்லரை மராஅத்த கடவுள்’ என்று மலைபடுகடாம் சுட்டுகின்றது. மரங்களில் தெய்வம் உள்ள செய்தி சங்க இலக்கியங்களில் விரிவாகக் காணப்படுகின்றது. மரத்தின் அடியிலும் தெய்வத்தை அமைத்து வழிபடுவதும் உண்டு.

கள்ளி நீழற்கடவுள் வாழ்த்தி (புற நானூறு 260) என்ற செய்தியையும் காணலாம். மரத்தையே நட்டுத் தெய்வமாக வழிபட்டனர். கந்துடை நிலை என்று அதனைக் குறிப்பிட்டனர். கந்துடை நிலை, கந்துத் தறி என்பனவே பின்னர் சிவலிங்கம் ஆயிற்று.

மரங்களின் மிகுதியால் கடம்பவனம், தில்லைவனம், ஆலங்காடு, மாங்காடு என்று அந்தந்த மரத்தால் பெயர் வழங்கலாயிற்று. கடம்பவனம்-மதுரை-இன்றும் மதுரைத் கோவிலில் தலமரம் கடம்ப மரமே. தில்லைவனம் - சிதம்பரம் - தில்லை மரமே சிதம்பரத்தின் தலமரமாகும். தில்லைச் சிற்றம்பலம் என்பது தேவார வழக்கு. மரம் அடர்ந்த காடாக இருந்து பின் ஊரானபோது அவ்வாறு பெயர் ஏற்பட்டிருக்கும்.

மரத்தின் அடியில் தான் முதலில் தெய்வத்தை வழிபட்டனர். பின் கோவில்கட்டி வழிபட்ட போது மரத்தைக் கோவிலில் அமைத்தனர். அதுவே தலமரம் எனப் பெயர் பெற்றது.

காஞ்சிபுரத்தில் மாமரம் மிகப் பழமையானதாகும். மாமரத்தின் கீழ் இருப்பதனால் இறைவனுக்கு மாமூலர் என்று பெயர். சங்க காலத்தில் மாமூலனார் என்ற பெயரில் புலவர் ஒருவர் உள்ளார். பிறகாலத்தில் வடமொழியில் ஏகாம்பரம் என்று அழைக்கப்பட்டது. இப்பெயரே, ஏகம்-ஒற்றை, ஆம்பரம்-மாமரம். ஒற்றை மாவின் கீழ் உள்ளார் என்ற பொருளில் ஏகாம்பரர், ஏகம்பர நாதர் என வழங்கலாயிற்று. இன்றும் மாமரமே அங்கு தலமரமாகும். திருவானைக்காவில் நாவல் மரம் தலமரமாகும் நாவல் மரத்தின் கீழிருந்த இறைவனைச் சிலந்தியும், யானையும் பூசித்தன. மரத்திலிருந்து சருகுகள் விழாமல் சிலந்தி நூலிழைத்துப் பந்தலாக அமைத்து வழிபட்டது. யானை நாள்தோறும் காவிரியில் நீராடி துதிக்கையில் நீரைக் கொணர்ந்து திருமஞ்சனம் ஆட்டியது.

யானையால் சிலந்திக் கூட்டுப் பந்தல் சிதைந்தது. மீண்டும் சிலந்தி பந்தல் அமைத்தது. அடுத்த நாளும் யானை வந்து நீர்விட்டு வழிபட்ட போது சிலந்திக் கூட்டுப் பந்தல் அழிந்தது. கோபம் கொண்ட சிலந்தி யானையின் துதிக்கையின் துவாரத்தினுள் புகுந்தது, யானை கீழே விழுந்து துதிக்கையை நிலத்தில் அடித்துக்கொண்டு இறந்தது. சிலந்தியும் இறந்தது.

யானைக்கு முத்தி கொடுத்துச் சிலந்தியை அடுத்த பிறப்பில் சோழர் மரபில் பிறக்குமாறு செய்தான் இறைவன். அவ்வாறு பிறந்த மன்னனே கோச்செங்கட் சோழன் ஆவான். திருக்கோவில் பணிகள் பல செய்தான்.

     “சிலந்தியும் ஆனைக் காவில் திரு நிழல் பந்தர்செய்து
      உலந்தவண் இறந்த போதே கோச்செங்கோணானும் ஆகக்
      கலந்த நீர்க் காவிரி சூழ்சோணாட்டுச் சோழர் தங்கள்
      குலந்தனிற் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே”


என்பது தேவாரப் பாடல்.

வெண்ணாவல் மரத்தின் கீழிருந்ததால் இறைவனுக்கு வெண்ணாவலீசுவரர் என்று பெயர். நாவல் என்பது வடமொழியில் சம்பு எனப் பெறும். இறைவன் சம்பு நாதர் ஆனார். ஆனை வழிபட்டதால் ஆனைக்கா எனப் பெயர் ஏற்பட்டது. ஆனைக்கா என்பதை வடமொழியில் தந்திவனம், கஜாரண்யம் என மாற்றப்பட்டது. ஆனாலும் ஆனைக்காவே வழக்கில் வழங்கி வருகின்றது. பிற்காலத்தில் கோவில் கட்டப்பெற்ற போது நாவல் மரம் தலமரம் ஆயிற்று.

பெரும்பாலான கோவில்களில் மரங்களில் கீழேயே கடவுளரை அமைத்து வழிபட்டனர். பிற்காலத்தில் கோவில் கட்டப்பெற்றபோது மரங்கள் தலமரங்கள் ஆயின.

திருப்புன்கூர், திருப்பனையூர், திருப்பயற்றூர், திருமகல், திருவிரும்பூளை, திருத்தெங்கூர், திருநெல்லிக்கா, எருக்கத்தம்புலியூர், திருத்தினைநகர், திருப்பாதிரிப்புலியூர், கச்சிநெறிகாரைகாடு, திருவாலங்காடு, திருப்பாசூர், திருக்கள்ளில், திருமுல்லை வாயில், திருவேற்காடு முதலிய தலங்கள் மரங்கள் அடிப்படையில் அமைந்தவையே ஆகும்.

தலமரங்கள் அந்தந்த இயற்கைச் சூழலுக்கு ஏற்ப அமைந்தவை ஆகும். கோவை மாவட்டத்தில் காரமடை இதற்குத் தக்க சான்றாகும். காரைச் செடிகள் வறண்ட பகுதிகளில்தாம் வளரும். காரை செடியின் கீழ் இருந்த தெய்வ உருவத்திற்கு மாடு நாள்தோறும் பால் சொரிந்து வந்தது. மாடு மேய்ப்பவன் கண்டு காரைப் புதரை ஆய்ந்த போது தெய்வத் திருவுருவம் காணப்பட்டது. பின்னர் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. காரைச் செடிமிக்கிருந்ததால் காரமடை ஆயிற்று. கடவுள் காரமடை நாதர் ஆனார். கரடிகள் மிக்கு நெருங்கிய ஊர் கரடிமடை. பனிமடைந்தவூர் பனிமடை, இன்று பன்னிமடை, கள்ளிமடைந்தவூர் கள்ளிமடை.

திருக்கோவில் மரங்களில் உயர்வு தாழ்வு இல்லை. மாமரமும் உண்டு. எருக்கிலை, கொட்டைச் செடி முதலியவைகளும் தலமரமாக உள்ளன. அப்பகுதி மக்களால் எளிதில் வளர்க்கக் கூடிய வளரக்கூடிய மரங்கள் தலமரங்களாயின. மக்களுக்கும், கால்நடைகளுக்கும் நிழல் தரும் மரங்கள் இறைவனுக்கும் மரமாயிற்று.

இயற்கைச் சூழல் வழிபாடு, இயற்கையோடு அமைந்த வாழ்வு தமிழ் மக்கள் மேற்கொண்டவை. மரம், செடி, கொடிகளை மக்கள் போற்றினர். இலை, காய், கனி உணவாயிற்று. வேர், பட்டை முதலியன மருந்தாயிற்று. ‘மருந்தாகித் தப்பா மரம்’ என்பார் வள்ளுவர்.

மரம், செடி, கொடிகள் பாதுகாக்கப்பெற வேண்டியவை. வீணாக அழிக்கக் கூடாது என்று எண்ணிய தமிழ்ச் சான்றோர் கடவுளரோடு அவற்றைத் தொடர்பு படுத்தினர்.

கிராமப்புறங்களில் இன்றும் கோவில் மரங்களை வெட்டக்கூடாது. வெட்டினாலும் வீட்டு விறகாக எரிக்கக் கூடாது என்ற நம்பிக்கை இருப்பதைக் காணலாம்.

Thursday, 8 November 2012

ஆலயங்களில் பலிபீடம் எதற்காக?


—  ந. இரா. சென்னியப்பனார்

திருக்கோயில் அமைப்பில் முன் கோபுரம், பிரகாரங்கள், கொடிமரம், வாகனம், விமானம் முதலியன முக்கியமானவை. இவை அனைத்தும் தத்துவ அடிப்படையில் அமைந்தவை ஆகும். மனிதன் இயல்பை அறிவுறுத்துவதே ஆலய அமைப்பாகும்.

கோ + இல் = கோயில் - தலைமையான இல்லம் என்பது பொருள். ஆ + லயம் = ஆலயம். ஆன்மா - உயிர்; லயிக்கும் – இறைவனோடு ஒன்றுபடும் இடம் என்பது பொருள். மனிதர் யார்? என்பதனை விளக்குவதே ஆலய வழிபாட்டு நிலையாகும். மனிதன் உடம்பாக மாட்டான். குணமாக மாட்டான். அறிவு ஆகமாட்டான். இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டவன். அந்த நிலையே ஆன்மா ஆகும்.

ஆன்மாவின் பல்வேறு நிலைகளைச் சர்வஞானோத்தரம் என்னும் ஆகமம் சிறப்பாக விளக்குகின்றது. மனிதன் தன் உடம்பையே, தூல தேகத்தையே, பரு உடலையே தானாகக் கருதும்போது தேகான்மா எனப்படுகின்றான். சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி ஆகிய வாக்குக்கள் அடிப்படையான இச்சைகள் ஆகியவற்றைத் தானாகக் கருதும்போது அந்தரான்மா எனப்படுகின்றான். தத்துவங்களையும், அவற்றை அறியும் கருவியாகிய மனத்தையும் தானாகக் கருதும்போது தத்துவ ஆன்மா எனப்படுகின்றான்.

முற்கூறிய அனைத்தையும் அடக்கியாளும் உணர்வு தோன்றி, அதனால் நான் பிரமம் என்ற முனைப்பு ஏற்படும்போது சீவான்மா எனப்படுவான். பின் நல்லறிவு தோன்றி யான், எனது என்ற செருக்கு நீங்கிப் பேரின்பத்தை அடைய மந்திரம் செபிக்கும்போது மந்திரான்மா எனப்படுவான். இறுதியாக, இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையில் பரமான்மா எனப்படுவான். இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டே கோயில் அமைப்புகள் உள்ளன.

முன் கோபுரம் உயர்ந்து காணப்படும். அதுவே தேகான்மா அல்லது தூல லிங்கம் எனப்படும். பலிபீடம் அந்தரான்மா அல்லது பத்திரலிங்கம் எனப்படும். கொடிமரம் தத்துவான்மா அல்லது துவச லிங்கம் எனப்படும். கருவறையில் உள்ள லிங்கம் சீவான்மா அல்லது சதாசிவ லிங்கம் எனப்படும். இதுவே அருவுருவ நிலையாகும். ‘காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய், நீள் நாகம் பூண்டார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்’ என்பார் சேக்கிழார் பெருமான்.

சிவத்துக்கு லிங்கம்-சிவத்துக்கு அடையாளம் - சிவத்துக்குக் குறி சிவலிங்கம் ஆகும். உருவம்-நடராசர், தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர் முதலிய வடிவங்கள், மகேசுவர மூர்த்தங்கள் எனப்படும். உருவம் இல்லாதது அருவநிலை, ஞானியர்களால் வழிபடும் நிலையாகும். அருவுருவம் சிவலிங்கம் ஆகும். இம்மூன்று நிலையும் ஆன்மாக்கள் உய்ய வேண்டும் என்பதற்காக இறைவன் கொண்ட நிலையாகும்.

“உருமேனி தரித்துக் கொண்டது
என்றலும், உருவுஇறந்த
அருமேனி அதுவும் கண்டோம், அருவுருவான போது
திருமேனி உபயம் பெற்றோம், செப்பிய மூன்றும் நந்தம்
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே!”

என்று சிவஞான சித்தியார் குறிப்பிடுகிறது.

திருக்கோயில் பூசை செய்யும் அர்ச்சகர் மந்திரான்மா அல்லது ஆன்ம லிங்கம் எனப்படும். பரந்த பெருவெளி பரமான்மா அல்லது அகண்ட லிங்கம் எனப்படும். இவற்றுள் பலிபீடம் என்றதும் பலி கொடுப்பது-உயிர்ப்பலி இடுவது என்ற தவறான எண்ணம் உண்டாகிறது.

‘கொடுமணி இயக்குமின் குறிஞ்சி பாடுமின், நறும்புகை எடுமின், பூப்பலி செய்ம்மின், காப்புக் கடைநிறுமின்’ - என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘பூசை செய்யும் போது மணியடிக்க வேண்டும். தோத்திரம் பாட வேண்டும். வாசனைப் புகை எடுக்க வேண்டும். பூக்களைப் பலியாகத் தூவ வேண்டும். பூசை செய்வோர் காப்புக்கட்ட வேண்டும்’ என்ற முறை வழிபாட்டில் பண்டுதொட்டு இருந்து வந்ததை இளங்கோவடிகள் சுட்டியுள்ளார். தற்காலத்தில் புஷ்பாஞ்சலி என்று கூறுவதையே இளங்கோவடிகள் பூப்பலி செய்தல் எனத் தமிழில் குறிப்பிட்டுள்ளார். கோவில்களிலுள்ள பலிபீடம் தத்துவ அமைப்பு உடையது. உயிர்ப்பலி இடுவது ஆகாது.

திருக்கோயில் அமைப்பு முறைகளைத் தெளிவாகப் பாடியவர் திருமூலர் ஆவார். கோயில் அமைப்பு முறைகளை நன்கு ஆராய்ந்து அறிவோர், கருவறையில் மேல் உள்ள விமானம் தூல லிங்கம் என்றும் கருவறையில் உள்ளே உள்ளது-சதாசிவ லிங்கம் அல்லது சூக்கும லிங்கம் என்றும், முன் பகுதியில் விரிந்து காணப்படும் பலிபீடம் பத்திர லிங்கம் என்றும் கொள்வார்கள்.

“தூய விமானமும் தூலமது ஆகுமால்
ஆய சதாசிவம் ஆகும் நற்சூக்குமம்
பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே”

என்பது திருமந்திரப் பாடல் ஆகும்.

பலிபீடம், வாகனம், சிவலிங்கம் மூன்றும் முறையாக அமைந்திருக்கும். பலிபீடம்-பாசத்தின் அறிகுறி. வாகனம் பசுவை-உயிரைக் காட்டும் அறிகுறிப் பொருள். கருவறையில் அருவுருவமான சிவலிங்கம் - பதியைக் காட்டும் அறிகுறியாகும்.

“ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடல் ஏறு என நிற்கும்
ஆய பலிபீடம் ஆகும் நற்பாசம் ஆம்
ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே”

என்று திருமூலர் பாடியுள்ளார்.

திருக்கோயில் அமைப்பை ஆராய்ந்து அறிவோர்க்குக் கருவறையில் உள்ள சிவலிங்கம் பதியாகும். லிங்கத்தின் முன் உள்ள எருது வாகனமே (ஆன்மா) ஆகும். பின் உள்ள பலிபீடம் பாசம் ஆகும் என்பது பாடற் பொருள். ஆன்மா, பாசத்தைவிட்டுப் பதியை அடைய வேண்டும். ‘பாசத்தைப் பசுக்கள் விட்டுப் பதியை அடைதல்’ என்று சிவஞான சித்தியார் குறிப்பிடுகின்றது.

கோவிலுக்குள் செல்லும்போது யான், எனது என்னும் செருக்கு, உலக பந்த பாசங்கள் ஆகியவற்றைப் பலியிட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகவே பலிபீடம் அமைக்கப்பட்டது.

எருது வாகனம் லிங்கத்தை நோக்கும்போது பலிபீடம் அதன் பின்னே அமைகிறது. பதியையே நினைக்கின்ற உயிர்களுக்குப் பாசங்கள் பிற்பட்டுத் தங்கிவிடும். எருது வாகனம் லிங்கத்தை நோக்காது வெளியே நோக்கினால், பலிபீடம் முன்னே இருக்கும். சிவ சிந்தனையில்லாது உலக சிந்தனை உடையவர்க்குப் பாசங்கள் மேலோங்கியிருக்கும்.

கோவில்களில் உள்ள வாகனங்கள் - ஆன்மாக்களின் பிரதிநிதிகள். பலி பீடங்கள் - உலக பாசங்கள். எனவே உலக பாசங்களை விட்டு நீங்கி இறைவனை அடைவதே உண்மை நிலையாகும்.

Wednesday, 7 November 2012

கருவறை இருட்டாக இருப்பது ஏன்?




— முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

தமிழகத்தில் தெய்வ வழிபாடு மிகத் தொன்மை வாய்ந்தது. வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டுத் தெய்வ வழிபாடு நடைப்பெற்றுள்ளது. தொல்காப்பியத்தில் கோயிலில் கந்தழி வழிபாடு செய்த சான்றுகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் கோயில் அமைப்பு, வழிபடும் முறை முதலியன ஆங்காங்கு உள்ளன.

பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் என்ற புலவர் பாடும்போது ‘முனிவர்கள் வணங்கும் மூன்று கண்களையுடைய சிவபெருமான் கோயிலை வலம் வரும்போது, உன்னுடைய கொற்றக்குடை பணிவதாக’ என்ற பொருளில்

“பணி இயர் அத்தை நின்குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே”
எனப் புறநானூற்றில் பாடியுள்ளார்.

எனவே, சங்க காலத்தில் கோயில் வலம் வரும் முறையும், நாடாளும் மன்னனாக இருந்தாலும் கோயிலுள் குடைபிடித்துச் செல்லக்கூடாது என்பதும் தெரிய வருகின்றன.

புகார் நகரில் - கற்பகத்தரு, ஐராவதம் பலராமன், சூரியன், சம்பாதி, வேல், மாசாத்தன், அருகன், சந்திரன் முதலியோர்க்குக் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தில் காண முடிகிறது.

பெருங்கோயில், கரக்கோயில், ஞாலக்கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் ஆகிய கோயில்களைத் திருநாவுக்கரசர் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். தொடக்க காலத்தில் மண், செங்கல், மரம் முதலியவற்றால் கோயில்கள் கட்டப்பெற்றன.

பல்லவர் காலம் முதல் கற்கோயில்கள் தோன்றின. கோயில் அமைப்பில் கோபுரம், பிரகாரங்கள், கொடிமரம், பலிபீடம், வாகனம், மண்டபங்கள், கருவறை முதலியன இடம்பெறுகின்றன. அனைத்தும் தத்துவ அடிப்படையில் அமைந்தவையாகும்.

கோயில் அமைப்பு மனித உடலோடு ஒத்தது. கோபுரம் மனிதனின் பாதம் போன்றது. மல்லாந்து படுத்திருக்கும் மனிதனின் பாதம் மேல் நோக்கியிருப்பது போல் நுழைவாயிலில் உள்ள கோபுரம் உயர்ந்து காணப்படுகிறது. கொடிமரம் மனிதனின் முதுகுத் தண்டு போன்றது. துவார பாலகர் மனிதனின் தோள்கள் போன்றவர். மகாமண்டபம், அர்த்த மண்டபம் உடம்பு போன்றவை. அந்தராளம் கழுத்து போன்றது. கருவறை தலை போன்றது.

‘என்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்’ என்பதற்கு ஏற்பக் கருவறை, கோயில் அமைப்பில் மிக முக்கியமானது.

கருவறைக்கு மூலஸ்தானம், உண்ணாழி எனப் பலபெயர்கள் வழங்கப் பெறுகின்றன. “கருவொடு பெயரிய காண்பின் நல்லில்” என்று சங்க இலக்கியமான நெடுநல்வாடை கருவறையைக் குறிப்பிடுகின்றது. கருவறையில் கோயிலுக்குரிய மூலமூர்த்தி அமைந்திருக்கும். இயற்கையாக அமைந்த கோயில் அல்லாமல் கட்டுகின்ற கோயில்களில் அளவுக்குத்தக்கபடி பக்கத்திற்கு எட்டு எட்டாக 64 சதுரங்கள் அல்லது ஒன்பது ஒன்பதாக 9 × 9 = 81 சதுரங்களில் கருவறை அமைக்கப்படும். சுற்றிலும் உள்ள சதுரங்களில் சுற்றுப்புற தெய்வங்கள், திருச்சுற்று இருக்க வேண்டும்.

சதுரங்கள் அமைப்பதற்குப் பதவின்யாசம் என்றும் சதுரங்களுக்கு மர்மத் தானங்கள் என்றும் வழங்கப்படும். கருவறை சதுரம், நீள்சதுரம், வட்டம், அறுகோணம், எண்கோணம் என்ற ஏதாவது ஓர் அமைப்பில் இருக்கும். கருவறையில் அமைந்திருக்கும்; ஏனைய உருவங்களுக்கேற்பப் பிற்பகுதியில் தள்ளி அமைக்கும் முறை உண்டு.

கருவறையில் பின்சுவர் முதல் மையம் வரையில் பத்துப் பாகம் செய்து நடுவில் 10-வது பாகத்தில் சிவலிங்கம் அமைக்கப்படும். 9-வது பாகத்தில் பிரம்மாவை வைக்க வேண்டும். 8-வது பாகத்தில் விஷ்ணுமூர்த்தி வைத்தல் வேண்டும். 7-வது பாகத்தில் சுப்பிரமணியர் வைத்தல் வேண்டும். 6-வது பாகத்தில் சங்கரி, சரஸ்வதி, இலக்குமி முதலிய உருவங்கள் அமைத்தல் வேண்டும். 5-வது பாகத்தில் ஏனைய பெண் தெய்வங்கள், 4-வது பாகத்தில் கணபதி, 3-வது பாகத்தில் பைரவர், 2-வது பாகத்தில் துர்க்கை, பிடாரி என்ற முறையில் உருவங்களை அமைத்தல் வேண்டும்.

வைணவக் கோயில்களில் கருவறையை மூன்று பாகம் செய்து, பின்சுவர் முதல் பாகத்தில் மூல மூர்த்தியையும், இரண்டாவது பாகத்தில் உற்சவமூர்த்தியையும் வைப்பது மரபாக உள்ளது. எல்லாக் கோவில்களிலும் கருவறை இருண்டேயிருக்கும்.

பண்டைய ஆலயங்களில் உள்ள கர்ப்பகிரகங்கள் மிகவும் இருண்டு தொழுவோர் மனதில் ஒரு வகை அச்சத்தையும், அதிசயத்தையும், வியப்பையும், திகைப்பையும் உண்டு பண்ணுமாறு அமைந்திருக்கும். அதற்குச் சூட்சுமான மறைபொருள் ஒன்று அறைக்குள் நிறைந்து மிதப்பாக வாக்குக் கெட்டாத உணர்ச்சியொன்று அடியார் மனத்துள் உண்டாகும். அஃது அவர்கள் பக்தியைப் பெருக்கும். அறிவின் சிறுமையை உணர்த்தும். தம்மை மறக்கச் செய்யும். உண்மை அன்பர்களைப் பரவசப்படுத்தும் என்று இலஞ்சி-சொக்கலிங்கம் அவர்கள் ஆலயங்களின் உட்பொருள் விளக்கம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

கர்ப்பக்கிருகம் என்பது பிரதான மூர்த்தியை வைத்து வணங்கும் இடமாகும். இதற்கு மூலஸ்தானம் என்றும் பெயர் உண்டு. இதன் உண்மை-எல்லாம் புத்தி தத்துவத்தில் ஒடுங்க. புத்திதத்துவமும் தனு, கரண, புவன, போகங்களும் மாயையில் ஒடுங்க, மாயை இறைவன் திருவடியில் ஒடுங்கும். இந்நிலை கேவலநிலை என வழங்கப்பெறும்.

அநாதி கேவல நிலையில் உயிர்களில் மீண்டும் பிறப்பதற்குப் பக்குவமானவையும் இருக்கும். கேவல நிலையில் உள்ள உயிர்கள் போதிய ஓய்வு எடுத்துக் கொண்டபின், மீண்டும் பிறந்து ஆன்ம யாத்திரையைத் தொடரும் நிலையில் உள்ளன. இவ்விரு வகை உயிர்களும் மீண்டும் பிறப்பதற்கு வர இறைவன் அருள்செய்ய வேண்டியுள்ளது.

பேரூழிக்கால இருளின் முடிவு நீங்கி மீண்டும் பிறக்கும்போது, பிறவியாகிய இருளின் தொடக்கம் உண்டாகின்றது. இப்பிறவி எடுத்து அறியாமையாகிய இருளில் துன்பப்படும் உயிர்களை இறைவன் திருவருள் சக்தியின் துணைகொண்டு ஈடேற்ற விரும்புகிறான்.

“இருட்டறை மூலை யிருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கி குணம்பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே”
என்று திருமூலர் பாடியுள்ளார். இருட்டறை - கருவறை, மூலையிருந்த குமரி - மறைந்திருந்த திருவருட்சக்தி, குருட்டுக் கிழவன் - அறியாமையில் மூழ்கியிருக்கும் ஆன்மா, கூடல் குறித்து - ஆன்மாவோடு சேர்ந்து அருள் புரிய எண்ணி, குருட்டினை நீக்கி - ஆன்மாவின் அறியாமையைப் போக்கி, குணம் பலகாட்டி - இறைவன் ஆன்மாக்கள் பொருட்டு இரங்கி வந்து அருள்புரியும் பெருமையை உணர்த்தி, மருட்டி அவனை மணம் புரிந்தாளே - திருவருளிடத்தில் அன்பு கொள்ளுமாறு மயக்கிச் சிவ மணம் கமழுமாறு செய்தாள் என்பது பொருள்.

அநாதி காலந்தொட்டு அறியாமையில் மூழ்கியிருக்கும் உயிர்களைத் திருவருட்சக்தியால் அறியாமையில் நீக்கிச் சிவப்பேற்றைத் தருவதற்காகவே கருவறையை நம் முன்னோர் இருட்டறை ஆக்கித் திருவருள்புரியும் திருவுருவங்களைக் கருவறையினுள் வைத்தனர்.

கருவறை இருட்டறையாக இருப்பதற்குக் காரணம் புரிகிறதா? புரியாமை என்ற அறியாமையின் அடையாளமே அந்த இருட்டு!

Monday, 5 November 2012

அறிமுகம்


பேரூர் மணிவசாகர் அருட்பணி மன்றம் 1993 - ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது. திங்கட்கிழமை தோறும் பேரூர் பட்டிப்பெருமான் திருக்கோயிலில் வார வழிபாடு தொடர்ந்து நடத்தப் பெற்றது. பேரூரில் உள்ள திருக்கோயில்களில் உழவாரப் பணி மேற்கொள்ளப்பெற்றது. உழவாரப் பணி மேற்கொண்ட காலத்துத் தென் கயிலாயக் கோயில் பாழ்ப்ட்டிருந்ததைத் திருப்பணி செய்து குருக்களைக் கொண்டு திருக்குட நன்னீராட்டு செய்யப்பெற்றது. தொடர்ந்து அழகிய திருச்சிற்றம்பலம், மாதேசுவரர் திருக்கோயில்கள் மன்றத்தால் திருப்பணி செய்யப்பெற்றது. திருக்குட நீராட்டு செய்யப்பெற்றன.

மக்களிடம் திருமுறை ஈடுபாடும், திருமுறைப்படி வாழ்வியல் சடங்குகளை நடத்த வேண்டுமென்ற விருப்பம் இருப்பதை நன்கு உணர்ந்ததால் மன்றத்தின் வாயிலாகத் திருமணம், புதுமனை புகுதல், நீத்தார் கடன் முதலிய வாழ்வியல் சடங்குகளைத் தமிழ் நெறி முறையில் மன்ற அன்பர்கள் ஆங்காங்கே செய்யத் தொடங்கினர். தமிழ் நெறியில் திருக்குட நன்னீராட்டு மன்றத்தின் வாயிலாகச் செய்தபோது மக்களின் எழுச்சியைக் காணமுடிந்தது. ஆங்காங்கே தமிழ் நெறிச் சடங்குகளுக்கும், திருக்குட நன்னீராட்டுக்கும் அன்பர்களுக்குப் பயிற்சி நடத்த வேண்டியிருந்தது. இதுவரை 30க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளும் 1000க்கும் மேற்ப்பட்ட தமிழ் முறைத் திருக்குட நன்னீராட்டுகளும் நடத்தப் பெற்றுள்ளன.

சடங்குகள் அனைத்தையும் ஒழுங்கு செய்து திருநெறிய தமிழ் முறைப்படி செய்வதற்க்கு “தமிழாகமச் செல்வர்” மா. பட்டியப்பனார் அவர்கள் தொகுத்துக் கொடுத்துள்ளார்கள்.

முனைவர் ந. இரா. சென்னியப்பனார் அவர்கள் மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தை வழிநடத்துகிறார்கள்.